×

தேர்தல் ஆணையம் பாஜவின் கைப்பாவை: சண்முகம் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலை தனியார் அரங்கத்தில் சிறு தொழில் நடத்துவோர் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதை நாங்கள் மக்களுக்கு, மக்கள் நலன் காப்பதற்கு பயன்படுத்துகிறோம். பாஜ அரசு நாடாளுமன்றத்தில் மின்சார சட்டம் 2025, விதைகள் சட்டம் 2025 ஆகியவற்றை நிறைவேற்ற இருக்கிறார்கள்.

மின் உற்பத்தி, விநியோகத்தை தனியார்மயம் ஆக்குவது தான் இந்த சட்டத்தின் நோக்கம். தனியாரிடம் சென்றால் எல்லா மக்களும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பினால் சிறுதொழில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் ஒன்றிய மோடி அரசு வாய்மூடி மவுனமாக உள்ளது. அந்த அரசு தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்காது. திருப்பரங்குன்றம் தீபம் பிரச்னையை கடந்த 2 மாதங்களாக அணையாமல் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று பாஜ சொல்லி வருகிறது. எல்லா தீர்ப்புகளையும் ஆர்.எஸ்.எஸ், பாஜ மதிக்கிறதா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்து பிரசாரம் செய்தது. அதேபோல் பாபர் மசூதி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை தகர்த்தனர். எனவே நீதிமன்ற தீர்ப்பு இவர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்பது, மாறாக இருந்தால் எதிர்ப்பது என்பதுதான் இவர்கள் அணுகுமுறை.

இத்தகைய மதவெறி சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி பங்கீடு, இயற்கை பேரிடர் நிதி, கோவை மதுரை மெட்ரோ திட்டங்கள், ஓசூர் விமான நிலையம் என மாநில அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இதை திமுக எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தங்கள் கட்சிக்காரர்களை களத்தில் இறக்கி போராட்டமும் நடத்துகிறது. தேர்தல் ஆணையம் பாஜவின் கைப்பாவையாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Election Commission ,BJP ,Shanmugam ,Tiruppur ,Tiruppur Kangayam Road ,Marxist Communist Party ,P. Shanmugam ,Left ,Parliament ,Legislative Assembly ,
× RELATED சொல்லிட்டாங்க…