புதுடெல்லி: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரஇருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘‘ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில், உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி.ஆஷா பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதியே விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. அது மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் ஆகும். எனவே இதனை அடிப்படையாக கொண்டுதான் ஜனநாயகன் திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
