மும்பை: அஜித்பவாரின் மறைவை தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவி ஏற்கிறார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் கடந்த 28ஆம் தேதி பாராமதி சென்ற போது விமானம் விழுந்து நொறுங்கி பலியானார். இதை தொடர்ந்து நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸை சந்தித்தனர். தெற்கு மும்பையில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
இந்தச் சந்திப்பில், மூத்த என்சிபி தலைவர்களான சகன் புஜ்பல், தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல், மாநிலத் தலைவர் சுனில் தட்கரே மற்றும் முன்னாள் அமைச்சர் தனஞ்சய் முண்டே உள்ளிட்டோர் பங்ககேற்றனர். அஜித்பவாரின் திடீர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தலைவர்கள் பட்நவிஸை சந்தித்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் பிரபுல் படேல் அளித்த பேட்டியில்,’கட்சியின் தலைவர் பதவியை நிரப்புவது இப்போது முக்கியமல்ல. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரையும் துணை முதல்வர் பதவியையும் நிரப்புவதே முக்கியம். இதற்காக முதல்வரை சந்தித்து பேசினோம். இந்த பதவிக்கு சுனேத்ரா பவாரை நியமிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதனை யாரும் எதிர்க்க முடியாது. சுனேத்ரா பவார் பொறுப்பேற்க எந்த எதிர்ப்பும் இல்லை. மக்களின் உணர்வுகளும் கட்சியினர் உணர்வுகளும் ஒன்று தான்.
ஆனால் முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அஜித்பவாரின் குடும்பத்தினரிடம் பேச வேண்டும். அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும்’ என்றார். இதுபற்றி சுனேத்ரா பவாரிடம் ஆலோசனை நடத்திய போது மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது, அதில் சுனேத்ரா பவார் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பின்னர் சுனேத்ரா மும்பையில் உள்ள ராஜ்பவனில் மாலை 5 மணிக்கு துணை முதல்வராகப் பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடைபெற்று வருகிறது. அஜித் பவார் மகாராஷ்டிராவின் நீண்ட காலம் பணியாற்றிய துணை முதல்வர் ஆவார். அவர் தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் கலால் துறைகளை வகித்தார். ஆனால் சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட உள்ளதாகவும், நிதித்துறையை முதல்வர் பட்நவிஸ் தன்வசம் வைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
* விமான விபத்து குறித்து சிஐடி விசாரணை தொடக்கம்
துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்த பாராமதி விமான விபத்து குறித்து மகாராஷ்டிர குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புனே போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்க உள்ளதாகவும் சம்பவம் நிகழ்ந்த பாராமதி விமான நிலைய ஓடுபாதைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
* அரசியல் வாரிசு பற்றி பேசுவது மனிதாபிமானமற்ற செயல்
அஜித் பவார் இறந்து சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள்ளாக அவருடைய அரசியல் வாரிசு பற்றி பேசுவது மனிதாபிமானமற்ற செயல் என்று உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
* அஜித் பவாரின் அஸ்தி கரைப்பு
மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, அவரது அஸ்தி புனே மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பாராமதிக்கு அருகிலுள்ள நீரா மற்றும் கர்ஹா நதிகளின் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அஜித்பவாரின் மகன்களான பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் இறுதிச் சடங்கு நடந்த இடத்திலிருந்து அவரது அஸ்தியை சேகரித்து, படகில் பாராமதிக்கு அருகிலுள்ள நீரா-கர்ஹா சங்கமத்திற்குச் சென்றனர். அங்கு அஜித் பவாரின் மூத்த மகன் பார்த் அஸ்தியைக் கரைத்தார்.
