×

தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அம்ரித் பாரத் ரயில் சேவை துவக்கம்: ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணம்

 

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அம்ரித் பாரத் ரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில் ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 23ம் தேதி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ரயிலின் வழக்கமான சேவைகள் நேற்று முதல் துவங்கியது. அதன்படி முதல் சேவை தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மதுரைக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.05 மணிக்கும், விருதுநகருக்கு 1.43 மணிக்கும், கோவில்பட்டிக்கு 2.23 மணிக்கும், நெல்லைக்கு 3.45 மணிக்கும், நாகர்கோவில் டவுனுக்கு 5.35 மணிக்கும் சென்றடைகிறது. இறுதியாக காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேர்கிறது.

மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயில் நாகர்கோவில் டவுனுக்கு 11.44 மணிக்கும், நெல்லை சந்திப்பிற்கு மதியம் 1.20 மணிக்கும், கோவில்பட்டிக்கு 2.28 மணிக்கும், விருதுநகருக்கு 3.13 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.55 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 4.55 மணிக்கும் செல்கிறது. அன்று நள்ளிரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரசில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 11 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள், ஒரு உணவுக்கூடம் என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கு நெல்லை – தாம்பரம் இடையே ரூ.420, விருதுநகர் – தாம்பரம் ரூ.370, மதுரை – தாம்பரம் ரூ.340, திண்டுக்கல் – தாம்பரம் ரூ.300 என கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பொது பெட்டிகளில் பயணம் செய்ய நெல்லை – தாம்பரம் ரூ.240, விருதுநகர் – தாம்பரம் ரூ.205, மதுரை – தாம்பரம் ரூ.195, திண்டுக்கல் – தாம்பரம் ரூ.170 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களை போல நவீன வசதிகளுடன், அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்ட போதிலும் இதில் ஏசி பெட்டிகள் கிடையாது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளும், முன்பதிவு இல்லாத பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் மட்டுமே இந்த ரயிலில் உள்ளன. இதனால் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயிலை வரும் நாட்களில் தினந்தோறும் இயக்கினால் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என தமிழக, கேரள ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தாம்பரத்தில் இருந்து ஐந்து மணிக்கு ரயில் புறப்பட்டு செல்வதால் வேலைக்கு செல்பவர்கள் வேலை முடித்து ஊருக்கு செல்லலாம் என திட்டமிட முடியாத நிலை உள்ளது.

எனவே 5 மணிக்கு புறப்படும் ரயில் நேரத்தை 7 மணிக்கு புறப்படும் வகையில் மாற்ற வேண்டும். அதேபோல தாம்பரம் – திருவனந்தபுரம் பயணி நேரம் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளதால் ரயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amrit Bharat train service ,Thambaram ,Thiruvananthapuram ,Tambaram ,Amrit Bharat Railway Service ,Tambaram Railway Station ,Kerala State ,PM Modi ,
× RELATED தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த...