பாங்காக்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை கடந்த 2021ம் ஆண்டு ராணுவம் கைப்பற்றியது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்கள், பொதுதேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து மியான்மரில் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது அதன்படி அந்நாட்டில் மொத்தமுள்ள 330 நகரங்களில் 102 நகரங்களில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 100 நகரங்களில் கடந்த 11ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தன. 61 நகரங்களில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜன.25) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 664 தொகுதிகளில் 586 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 25 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்களில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி((யூனியன் சாலிடாரிட்டி அன்ட் டெவலப்மென்ட் கட்சி) வெற்றி பெற்றிருந்தது. தற்போது மூன்றாம் கட்ட தேர்தலிலும் ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அன்ட் டெவலப்மென்ட் கட்சியே முன்னிலை வகிப்பதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மியான்மரின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
