சென்னை: பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கண்டித்து, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.க. வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக வரும் ஜனவரி 31 சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
