* வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
* கிடப்பில் உள்ள புறவழிச்சாலை பணியை தொடங்க கோரிக்கை
பெரியபாளையம்: பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு, வார இறுதி நாட்களில் வருகை தரும் பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்தும் சனிக்கிழமை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொந்த வாகனங்களிலும், பேருந்து, வேன், ஜீப் உள்ளிட்ட தனியார் பேருந்துகளிலும் பெரியபாளையத்திற்கு வருகை தருவர்.
பெரியபாளையத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சொந்த வாகனங்களில் வந்து அம்மனை தரிசித்து செல்வதால், பெரியபாளையம் சுற்றுப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.
இந்நிலையில் பெரியபாளையம் பகுதியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முக்கிய நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் இருந்து பெரியபாளையம் வழியே திருப்பதி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், பெரியபாளையம் பஜார் பகுதியில் கடை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதால், அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி சாலையை விரிவாக்க செய்ய வேண்டும் எனவும், கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .
