- இந்தியா
- ஜனாதிபதி
- முர்மு
- குடியரசு தினம்
- புது தில்லி
- 77வது குடியரசு தினம்
- குடியரசுத் தலைவர்
- திருப்பதி முர்மு
புதுடெல்லி: “மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்பி வருகிறது” என குடியரசு தலைவர் முர்மு கூறி உள்ளார். நாடு முழுவதும் இன்று 77வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: எங்கள் பாரம்பரியத்தில், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். உலகில் அமைதி நிலவினால்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நடந்து வரும் நிலையில், இந்தியா அனைவருக்கும் அமைதியின் செய்தியை பரப்புகிறது.
இந்தியா கடந்த ஆண்டு பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாத மையங்களை அழித்தது. பயங்கரவாதிகள் தங்கள் முடிவை சந்தித்தனர். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் பலத்தின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றுவதற்கு நாரி சக்தி(மகளிர் சக்தி) முக்கியமானதாக உள்ளது. பெண்களை காப்போம், பெண்களுக்கு கற்பிப்போம் என்ற பிரசாரம் நாடு முழுவதும் பெண்களின் கல்வியை ஊக்குவித்த பெருமைக்குரியது. பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், பாலின சமத்துவத்தின் அடிப்படையில் நம் நாடு முன்னோடியாக அமையும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நியாயமான விலையை பெறுவதை உறுதி செய்தல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவது, பயனுள்ள குறியீட்டுத்தொகை, நல்ல தரமான விதைகள், நீர்ப்பாசன வசதிகள், அதிக உற்பத்திக்கான உரங்கள், நவீன விவசாய நடைமுறைகளுக்கான அணுகல் மற்றும் இயற்கை விவசாயத்துக்கான ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக வறுமையில் போராடி வரும் நமது மில்லியன்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் வறுமையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தியோதயாவின் உணர்வை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய திட்டமான பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நம் நாட்டில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. இந்த திட்டம் சுமார் 81 கோடி பயனாளிகளுக்கு உதவி செய்கிறது. ஏழை குடும்பங்கள் மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கண்ணியமான வாழ்க்கை வாழ 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைய அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்கான இத்தகைய முயற்சிகள் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சர்வோதய லட்சியத்துக்கு உறுதியான வடிவத்தை அளிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
