சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் வாக்காளர்களைக் கசக்கிப் பிழியக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹில்லா இன்று வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு(எஸ்ஐஆர்) என்பது நாட்டின் முக்கியமான பணி. இதை மிகக் குறுகிய காலத்தில் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு மக்கள் மீது திணித்தது. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் பொறுமையுடனும் ஆர்வத்துடனும் பங்களிப்பு செய்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் சரி செய்தல் பணி நடைபெற்று வரும் சூழலில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் சந்தேகம் எழும் வகையில் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கை உள்ளது. வாக்காளர்களின் பதிவுகளில் தவறுகள் இருப்பதாகவும் அதைச் சரி செய்திட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல லட்சம் வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஒவ்வொரு வாக்காளர் நிலை அலுவலரிடமும் (பிஎல்ஓ) நூற்றுக்கும் அதிகமான தாக்கீடு இருப்பில் உள்ளது. இன்று வரை முறையாக வாக்காளர் கைகளில் அது கொடுக்கப்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. வாக்காளர்களுக்கு வரும் 30ம் தேதி என்று இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு வாக்காளர்களை அச்சுறுத்தும் செயல் ஆகும். வாக்காளர்களைச் சத்தமின்றி நீக்கும் நடவடிக்கையாக இதைக் கருத வேண்டியுள்ளது.
எனவே தேர்தல் ஆணையம் இது விசயத்தில் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குக் கால நீட்டிப்பு செய்ய வேண்டும். ஆவணக்கேட்பு தாக்கீடுகள் உரிய வாக்காளர்கள் கைகளில் கிடைத்ததைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எத்தனை லட்சம் வாக்காளர்களுக்கு ஆவணக் கேட்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு செய்யப்படவேண்டும். சில தொகுதிகளில் அதிமுகவினர் உயிருடன் இருப்பவர்களை இறந்து விட்டார்கள் அல்லது இடம் மாறிவிட்டார்கள் எனக் காழ்ப்புணர்ச்சியுடன் புகார் கொடுத்துள்ளனர். இதனை மிகக் கவனத்துடன் தேர்தல் ஆணையம் கையாள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணியை முறையாகவும் பரபரப்பு இன்றியும் மேற்கொள்ள வேண்டும்.
