இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவான சமூகத் தலைவர் ஒருவரின் வீட்டில் நேற்று திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விருந்தினர்கள் போல ஊடுருவிய தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தார். இந்த கொடூர தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீவிரவாத குழுக்களுக்கு எதிராகப் போராடி வரும் குழுவின் தலைவரான அந்த வீட்டு உரிமையாளரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அரசுக்கு ஆதரவான தலைவர்களை குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
