ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சை சேர்ந்த கொரென்டின் மோடேட் உடன் மோதினார். இப்போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய அல்காரஸ் 3 செட்களிலும் ஆதிக்கம் செலுத்தி, 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடினார். அதன் மூலம் 4வது சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனியில் மெத்வதேவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸ்ஸான் உடன் மோதினார். முதல் செட்டில் இரு வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் மரோஸ்ஸான் கைப்பற்றினார்.
அடுத்த செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதன் பின் சுதாரித்து லாவகமாக ஆடிய மெத்வதேவ், 7-5, 6-0, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் 3 செட்களையும் தொடர்ச்சியாக வென்று அசத்தினார். அதனால் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
