புதுடெல்லி: டி.20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசியின் 10வது டி.20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடத்தப்பட்டது. 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக், சூப்பர்-8 போட்டிகள் முடிவில் அரையிறுதி போட்டிக்கு தென்ஆப்ரிக்கா-நியூசிலாந்து, இந்தியா-இங்கிலாந்து தகுதி பெற்றன. இப்போட்டிகளில் வென்ற நியூசிலாந்து-இந்தியா பைனலில் மோதியது. அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்பைனலில் இந்தியா, 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, உலகக்கோப்பையை வென்றது.
இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையாக மூன்று டி.20 உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளது. அதுவும் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. 2024ல் கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலும், தற்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு, கோப்பையை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.27.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்திய அணிக்கான பரிசுத்தொகையாக ரூ.131 கோடி வழங்குவதாக நேற்று அறிவித்தது. இந்த பரிசுத்தொகையை அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்கள், தலைமை பயிற்சியாளர் காம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாப்களுக்கு பிரித்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
