×

ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவின் ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் வெளியேற்றம்: கடைசி நேரத்தில் ஏமாற்றம் அளித்த அறிவிப்பு

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: 98ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது இறுதிப் பட்டியலில் இந்தியாவின் ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் இடம்பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவில் 2026ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி 98ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் நீரஜ் கைவான் இயக்கத்தில் உருவான ‘ஹோம் பவுண்ட்’ என்ற திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது. கரண் ஜோஹர் மற்றும் ஆதார் பூனாவாலா தயாரிப்பில், ஹாலிவுட் ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கோர்செசி நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இப்படத்தில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலி மிகுந்த வாழ்க்கையைப் பேசும் இப்படம், கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட முதல் 15 படங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்து ஆஸ்கர் கனவை அதிகரித்திருந்தது. ஆஸ்கர் குறும்பட்டியலில் இடம்பிடித்த 5வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஆஸ்கர் அகாடமி வெளியிட்ட இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் பிரேசில், பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் மட்டுமே தேர்வாகின; இதனால் இந்தியாவின் ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் போட்டியிலிருந்து வெளியேறியது.

இதுகுறித்துத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கூறுகையில், ‘விருது கிடைக்கவில்லை என்றாலும், இந்தப் படம் எங்களுக்கு ஒரு லட்சியப் படைப்பு; இயக்குநரின் தொலைநோக்குப் பார்வைக்குப் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் இம்தியாஸ் அலியும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறித் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags : India ,Oscars ,Los Angeles ,United States ,
× RELATED நிர்வாக செலவுகளை குறைக்க அமேசான்...