×

அபிராமி அந்தாதி எனும் சொற்கோயில்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“அபிராமி அந்தாதி” என்ற நூலின் தலைப்பிலேயே அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கட்டுவதால் “அந்தம்” என்ற சொல்லையும், அனைத்து நன்மைகளுக்கும் துவக்கத்தை செய்வதால் “ஆதி” என்ற சொல்லையும், அதை செய்பவள் என்பதால் அபிராமி என்றும் திருக்கடையூரில் அருள்பாலிக்கும் அபிராமியையும் குறிக்கும் வகையில் “அபிராமி அந்தாதி” என்று பெயர் சூட்டி இருக்கிறார் பட்டர்.

ஒரு பாடலின் முடிவாக வரும் எழுத்தையோ சொல்லையோ அடுத்த பாடலின் துவக்கமாகக் கொண்டதால் அந்தாதி என்று பெயர் பெற்றது. இந்த அந்தாதி இலக்கணப்படி அமைந்த பாடலே அந்தாக்ஷரி என்று மாணவர்களுக்கு மனப்பாடத் திறனை வளர்ப்பதற்கும் அதிக பாடல்களை மறக்காமல் தொடர்ச்சியாக நினைவில் பதித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பட்டர் அமைத்துள்ளது சாலச் சிறந்தது. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் தனித்து முழுமையாக பொருள் தர வல்லது என்றாலும் சில பாடல்கள் இனைத்தும் பொருள் தரவல்லது. காப்பு முதல் பயன் வரை 102 பாடல் களையும் தனித்தும் இணைத்தும் தொகுத்தும் பொருள் கொள்ளலாம். மேலும், ஒரு பாடலில் பயன்படுத்திய சொல்லையோ வரியையோ வேறு பாடலில் உள்ள சொல்லோடும் வரியோடும் சேர்த்தும் பொருள் புரிந்து கொள்ளலாம் உதாரணமாக காப்பு “தாரமர் கொன்றையும்” காப்பு தனிப்பாடலாய் பொருள் கொள்ளலாம்.

“ககனமும் வானும் வானமும் காண”(65) என்ற பாடலில் காமனை எரித்தவனிடத்து ஐந்து குழந்தைகளை ஈன்ற அபிராமி அம்மையின் உயர்வு சிறப்பையும் “வல்லபம் ஒன்றறியேன் சிறியேன்”(66) அத்தகைய வல்லமை ஏதும் தான் அறியாதவன் என்று பாடியுள்ளார். இரண்டையும் இணைத்து பொருள் கொண்டால் கடவுள் தன்மைக்கும் மானுடத் தன்மைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் சில பாடல்களை இணைத்து அமைத்துள்ளது அபிராமி பட்டரின் தனிச்சிறப்பு.

“நான் முன் செய்த புண்ணியம் ஏது” (12) என்ற வரியால் நான் முன்னர் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புகின்றார் 12 வது பாடலில் கேட்ட கேள்விக்கு 40 ஆவது பாடலில் “அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே” என்று பதிலளிக்கின்றார். ஒரு பாடலின் வரிக்கும் மற்ற பாடலின் வரிக்கும் உள்ள தொடர்பு “அறியா மறையை” என்ற மூன்றாவது பாடலில் உள்ள சொல்லுக்கு 76 ஆவது பாடலில் விளக்கம் அளிக்கின்றார். உமையம்மையை குறித்து யாவரும் அறியாத ரகசியத்தை அவள் அருளால் அவள் அறிவித்தபடிதான் அறிந்தேன் என்பதை நின் குறிப்பு அறிந்து என்ற சொல்லால் உமையம்மையை பற்றிய ரகசியத்தை அவளே அறிவித்தாளன்றி அரிய இயலாது என்பதை நமக்கு வலியுறுத்துவது அறிந்து இன்புறத்தக்கது.

“ தாரமர்” என்ற முதல் சொல்லின் முதல் எழுத்தையும் “தீங்கில்லையே” என்ற பயனின் கடைசி எழுத்தையும் இணைத்தால் ஆதி அந்தமாகிய “தாயே” என்ற சொல் வரும் நூற்றிரண்டு பாடல்களில் தாயே, தாயாக அறிந்து, தாயாக உணர்ந்து, தாயாக வணங்கு என்று 102 பாடல்களிலும் பரிந்துரை செய்கின்றார், பட்டர். அது மட்டும் அல்லாமல் உமையம்மையின் அருளை யாவரும் அறிய பயன்படுத்த வேண்டிய சில சாதனங்களையும் அறிவிக்கின்றார்.

அந்த சாதனம் இறை அருள் அனுபவத்தை தோற்றுவிக்க வல்லது அதை தமிழில் குறிப்பிட்டாலும் வடமொழி ஆகமங்களின் துணை கொண்டு அறிய வேண்டும். அவ்வாறு அறியாமல் மொழி அறிவோடு மட்டும் நோக்கினால் பூரணமான பொருள் அறியாது போய்விடும். “ஒளிர்கின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே”(19) என்ற இச்சொல்லிற்கு நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

அதாவது ஒன்பது கோணம் என்பதாகும். ஆனால், வடமொழியில் அமைந்த ஆகமங்கள் ஸ்ரீ சக்கரத்தை குறிப்பிடும் வண்ணம் அமைந்த உமையம்மை எழுந்தருளும் யந்திரத்தை குறிப்பிடுகின்றார் என்பதை அறியலாம். மந்த்ர யந்திர, தந்திர என்ற சாஸ்திரத்தை அறிந்தோர்க்கே புலனாகும் மற்றொருவர்க்கு அரிய வாய்ப்புகள் குறைவு என்பதை ஊன்றி உணர வேண்டும்.

“கிளியே” “குயிலாய்” “மயிலாய்” “வெயிலாய்” என்ற வார்த்தை பஞ்சதசாஷரி என்ற மந்திரத்தை சுட்டும் குறிப்புச் சொல்லாகும். அதனால் இதை தமிழில் அமைந்த செய்யுள் என்று முடிவு கட்டிவிட முடியாது. வடமொழியில் அமைந்த ஆகம வழிபாட்டு ரகசியங்களை வெளிப்படுத்தும் திறவுகோலாக அந்தாதியை அமைத்திருக்கின்றார். அந்தாதியானது சக்தி பீடங்கள் என வழங்கப்படுகின்றன.

சக்தி திருத்தலங்கள் அனைத்திற்குமான திறவுகோல் என உணர வேண்டியது. அந்தாதியில் ஒரு இடத்தில் கூட திருக்கடவூர் என்ற வார்த்தையில்லை. ஆனால், அவரே இயற்றிய பதிகத்தில் ஒரு பதிகத்தில் கூட திருக்கடவூர் என்று சொல்லாமல் இல்லை. இதை கூர்ந்தாய்வு செய்தால் திருக்கடையூரில் உள்ள அபிராமிக்கு பாடியது “பதிகம்” என்றும் உலகில் உள்ள அனைத்து வழிபாட்டு சக்திகளுக்கு பாடியது “அபிராமி அந்தாதி’ என்றும் இரவு சாயத் துவங்கி நிலவு தோன்றும் வரை இரண்டு முகூர்த்த நேரத்தில் (மூன்று மணி நேரம் தற்கால மணிக் கணக்கில்) முழுவதுமாய் பாடி முடிக்கப்பட்ட நூல் எனவும் அறிய வேண்டியது.

பாடியதன் பயனாக அமாவாசை அன்று அபிராமி தனது தோட்டைவீசி நிலவாக்கிய பாடல் “விழிக்கே அருள் உண்டு” சரபோஜி மன்னன் அபிராமிக்கு கட்டியது கற்கோயில். சுப்பிரமணிய ஐயர் என்ற அபிராமி பட்டர் அபிராமி அம்மைக்கு கட்டியது சொற்கோயில் ஆகும். இரண்டையும் வாழ்த்தி வணங்கி பயன் பெறுவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags : Abhirami Andathi ,Abhirami ,
× RELATED யானை பலம் தந்திடும் ஸம்பத்கரி தேவி