×

பாதுகையின் பெருமை

பகுதி 14

பாதுகையின் மீது பதிந்திருக்க கூடிய உத்தமமான ரேகைகளை மையபடுத்தியே, ஸ்வாமி தேசிகன் அருளிய பத்ததியே “ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தின்”, 27வது பத்ததியான “ரேகா பத்ததி”. வேதங்களுக்கு எழுதா மறை என்றே ஒரு பெயர் இருக்கிறது. அந்த எழுதாத மறையான வேதங்கள்தான், பாதுகையில் இப்பொழுது, ரேகா ரூபங்களாக, வரி கோடுகளை போல, அமைந்திருக்கின்றன.

அப்படிப்பட்ட பாதுகையை சரணமடைகிறேன் என்றபடியே இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தை அருளி இருக்கும் ஸ்வாமி தேசிகன், இந்த பத்ததியின் கடைசி ஸ்லோகத்தில், எத்தனை பிரளயங்கள் வந்தாலும் மறையாமல் இருப்பது வேதம். பிரளயத்தில் அந்த வேதத்தை ரேகா வடிவில் பாதுகா தேவி தன்னகத்தே கொண்டு விளங்குகிறாள் என்கிறார்.

திருமாலின் திருவடியில் இருக்க கூடிய ரேகைகளைவிட பன்மடங்கு விசேஷமானவை பாதுகாவில் இருக்க கூடிய ரேகைகள். திருமாலின் திருவடி என்பது எப்பொழுதுமே பாதுகையின் மீதே படிந்திருக்கும் காரணத்தினாலே, அந்த அடையாளமே பாதுகா தேவியை சர்வ உலகத்திற்கும் ராணி என்பதை நிரூபிக்கிறது. சர்வ உலகத்திற்கும் நாயகியாக விளங்குபவள், பாதுகாதேவியேதான். இது மட்டுமா தங்கமயமான பாதுகையே! தேவர்கள் எல்லாம் உன்னை வந்து வணங்கும் போது, அவர்களது கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் எல்லாம் பாதுகையில் உராயும் போது, அந்த கிரீடத்தில் இருக்க கூடிய ரேகைகள், பாதுகையின் மீது அழுந்தி படிகின்றன. சர்வலோக சக்ரவர்த்தினியாக பாதுகை இருப்பதற்கு இந்த ரேகைகளும் ஒரு காரணமன்றோ?

‘`மணிமெளலி நிகர்ஷணாத் ஸுராணாம்
வஹஸே காஞ்சநபாதுகே! விசித்ரம்
கமலாபதி பாதபத்ம யோகாத்
அபரம் லக்ஷ்ண மாதிராஜ்யஸாரம்’’

நம் தலையில் எழுதியிருக்க கூடிய துர்வர்ணங்களை சுவர்ணங்களாக தன் சம்பந்தத்தாலே மாற்றி அமைப்பவள் பாதுகாதேவியே தானே? திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதற்கான பாக்கியத்தை தம் திருவருளால் அருளுபவள் பாதுகையேதான். திருமாலின் திருவடியில் இருக்க கூடிய ரேகைகளை பாதுகாதேவியே காட்டி கொடுக்கிறாள் என்கிறார் ஸ்வாமி தேசிகன். பெருமாளின் திருவடி தாமரைகளில் அவனே ஸர்வேஷ்வரன் என்று உணர்த்தும் விதமாக, குடை, கொடி, தாமரைப்பூ முதலிய ரேகைகள் அவனுடைய ஈஸ்வரத்தன்மைக்கு லட்சணங்களாக இருப்பதாக சொல்கிறோம்.

ஆனால், அந்த ரேகைகளை நம்மை போன்ற அடியார்களால் பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. அப்படியும், திருமாலின் திருவடியில் இப்படி எல்லாம்தான் இருக்கும் என்று நாம் காண்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருபவள் பாதுகாதேவியேதான். அந்த ரேகைகளை தன் மீது அடையாளமாக கொண்டு நம் போன்றவர்களுக்கு திருமாலின் திருவடியில் இருக்க கூடிய அடையாளங்களை காட்டி தருகிறாள் பாதுகா.

“பதகமல தலாந்த: ஸம்ஸ்ரீதாந் யாதபத்ர
த்வஜஸரஸிஜ முக்யாந்யைஶ்வரீ லக்ஷணாநி
அவகமயஸி ஸெளரே: பாதுகே மாத்ருஶாநாம்
உபரி பரிணதை: ஸ்வைர்தேவி! ரேகா விஶேஷை:
இனி 28வது பத்ததியான “ஸுபாஷித பத்ததிக்குள்’’ ஸ்வாமி தேசிகனோடு பிரவேசிப்போம்.

“ஸந்தஸ் ஸ்வேதஶ பரதேஶ விபாக ஸூந்யம்
ஹந்த ஸ்வவ்ருத்தி மநகாம் ந பரித்யஜந்தி
ராஜ்யே வநே ச ரகுபுங்கவ பதம் பதத்ரம்
கிம் வா ந கிம் பவதி கேலி விதெள விபூநாம்’’

தங்களுக்கென்று விதிக்கப்பட்ட கர்மானுஷ்டங்களை பெரியவர்கள், சாதுக்கள் விடவே மாட்டார்கள். அவர்கள் எங்கே சென்றாலும் சரி, அந்தந்த இடத்தில் இருக்க கூடியவைகளை கொண்டே தங்களது அனுஷ்டானத்தை அவர்கள் கடைப்பிடித்தே தீருவார்கள். ராமபிரானின் பாதுகையானவள் இப்படிப்பட்ட ஒரு கர்மானுஷ்டத்தை அல்லவா கடைபிடித்து காண்பித்திருக்கிறாள்? ராஜ்யத்தில் பகைவர்கள் உள்ளே புகாதபடி காத்த அதே பாதுகா தேவிதான், ராமபிரான் வனவாசம் சென்ற போது, அப்பகவானின் காலில் முள் குத்தாமல் காத்து கொடுத்தாள்? கண்டகசோதனம் என்று முள் இல்லாமல் அப்பெருமானின் திருவடியை காத்து நின்றாளே?

வாழ்க்கையில் நமக்கு கிடைக்க கூடிய பட்டம், பதவி, புகழ் எல்லாமே தெய்வ சங்கல்பத்தால் மட்டுமே கிடைக்கும். ஒருவருக்கு ஒரு பட்டத்தையோ பதவியையோ தரவேண்டும் என்று தெய்வம் தீர்மானித்து விட்டால், சங்கல்பித்துவிட்டால், அந்த பட்டம் என்பது அவர்களை தேடி வந்தே தீரும் என்பதற்கு ராமபிரானும் அவரது பாதுகையுமே சாட்சி. ராமபிரான் அரசபதவி ஏற்பது தடைப்பட்ட போதும், அவருக்கு சகோதரர்கள் இருந்த போதும், ராமரின் பாதுகைகள் தானே சிம்மாசனத்தில் ஏறி அழகாய் ராஜ பரிபாலனம் புரிந்தாள்? பகவத் சங்கல்பத்தை, பெருமையை அல்லவா காண்பித்தாள் பாதுகை?

செல்வம் சேர்ந்தால் குணமுண்டாகும் என்ற நீதியையும் எடுத்து காட்டி இருக்கிறாள் பாதுகாதேவி என்று அருளி ஸ்வாமி தேசின், அடிக்கடி திருமாலின் திருவடியோடு சஞ்சாரம் செய்வதால், அசைந்து கொண்டே இருக்கும் பாதுகையானவள், ராமபிரானால், தனக்கு பிரதி நிதியாக சிம்மாசனத்தில், அமர்த்தப்பட்ட உடனேயே, அசையாமல் ஸ்திரமாக இருந்தாள். மேலே சொன்ன அந்த நீதிக்கு எடுத்து காட்டாய் அல்லவா பாதுகை விளங்கினாள் என்றே வியக்கிறார் ஸ்வாமி தேசின்.அடுத்த 29வது பத்ததியான “ப்ரகீர்ண பத்ததி” யில் பாதுகையின் பெருமையை பற்றி பல விஷயங்களை அருளி இருக்கிறார் ஸ்வாமி தேசிகன்.

“விதெள ப்ரவ்ருத்தே யத் த்ரவ்யம்
குண ஸம்ஸ்கார நாமபி:
ஶ்ரேய: ஸாதந மாம்நாதம்
தத் பதத்ரம் ததாஸ்து மே’’

என்று, பாதுகையானவள் என்னவெல்லாம் செய்கிறாள் தெரியுமா? திருவரங்கனின் திருவடிகளின் தொடர்பு கொண்டவள், அடியார்களின் பாவங்களை போக்கி தூய்மையை கொடுக்க கூடியவள், தங்கக்கவசம், ரத்தின கற்கள் ஆகிய மேன்மைகளுடன் கூடியவள், பாதுகை, சடகோபன் என்ற பற்பல திருநாமங்கள் கொண்டவள், ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின் போதெல்லாம் உயர்ந்த வஸ்து என்றே கொண்டாடப்படக்கூடிய அந்த பாதுகையானவள் அடியேனுக்கு உயர்ந்த புருஷார்த்தத்தை (அறம், பொருள், இன்பம், மோட்சம் எனும் வீடு) அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறார் ஸ்வாமி தேசிகன்.

பகவானின் பாதுகையே! உன் ரத்தினங்களின் ஒளிக்கதிர்கள் கைகள் போல் வெகு தூரம் எட்டி நீட்டக் கூடியதாக இருக்கிறது. அப்படி விஸ்தாரமாக வீசக்கூடிய அந்த ரத்தின ஒளியின் வழி பகவானை எதிர்க்க வரும் அசுரர்களுக்கு நீ ஒரு செய்தி சொல்கிறாய். அது என்ன தெரியுமா? “உங்கள் சத்ருவான, பெருமாள் இதோ எழுந்தருள்கிறார். ஓடிப்போய் விடுங்கள்” என்று அறிவிப்பதாக தோன்றும். ரத்ன கற்களின் வழி ஒளி தந்து, அதே ரத்னகற்களின் நாதம் வழி ஒலியும் தந்து, திருவரங்கன் வருவதை உணர்த்தி, பகைவர்களை பயந்து அடங்கி ஒடுங்கிவிட செய்து விடுகிறாயே?

இது மார்கழி மாதம் அல்லவா? ஆண்டாள் நாச்சியாரை அவளது கிளியோடு சேர்த்து நாம் சேவிக்கும் மாதம் இது தானே? பாதுகையை அப்படி கிளி போல இருக்கிறது என்கிறார் தேசிகன். எப்படி தெரியுமா? பாதுகையே உன்னில் பதிக்கப்பட்ட மரகத கற்கள் பச்சை நிறம் கொண்டவையாக இருக்கின்றன. பத்மராக கற்களோ சிவந்த மூக்கை உடையதாக இருக்கின்றன. உனது நாதங்களோ மழலை பேச்சை பேசும் கிளிகள் எழுப்பும் இனிய ஒலியை போலவே இருக்கின்றன. ரங்கநாதனின் செல்ல கிளியை போலவே நீ இருக்கிறாய் என்று தேசிகன் பாதுகையை கொண்டாடுகிறார். பாதுகையை அடுத்து வரும் நிறைவு பகுதியில் நாமும் நம் மனம் நிறைய கொண்டாடி மகிழ்வோம்.

(பாதுகையின் பெருமை தொடரும்…)

நளினி சம்பத்குமார்

Tags : Swami Desikan ,
× RELATED யானை பலம் தந்திடும் ஸம்பத்கரி தேவி