×

500 போட்டிகளில் வெற்றிகளை குவித்து சாதனை படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து!

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது 500-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டென்மார்க்கின் லைன் கியர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், சர்வதேச மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைக் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டும் ஆறாவது வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார். ஒட்டுமொத்தமாக 516 வெற்றிகளைத் தனது கணக்கில் வைத்துள்ள சிந்து, அடுத்த சுற்றில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூ ஃபேயுடன் மோதவுள்ளார்.

மறுபுறம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஹாங்காங்கின் ஜேசன் குணவனை எதிர்கொண்ட அவர், வெறும் 33 நிமிடங்களில் 21-10, 21-11 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

இந்தியா ஓபனில் காட்டிய அதே சிறப்பான ஃபார்மைத் தொடரும் லக்ஷ்யா சென், காலிறுதியில் தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரராட்ஸகுலைச் சந்திக்கிறார். இதற்கிடையில், மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், நான்காம் நிலை வீரரான சோவ் தியென் சென்னை எதிர்கொள்ளும் சவாலான ஆட்டத்தில் விளையாடவுள்ளார்.

Tags : BADMINTON WEERANGAN ,P. V. ,Sindhu ,Indonesia Masters Super 500 badminton series ,Veerangan B. V. ,Denmark ,Line Gearsfeld ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே விலகல்!