விஜ்ஆன்ஸி: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் முதல் வெற்றியை பதிவு செய்தார். நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸி நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை முடிந்த 4 சுற்று போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாத தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், நேற்றைய போட்டியில் செக் குடியரசு வீரர் தாய் டாய் வான் நுகுயென் உடன் மோதினார். துவக்கம் முதல் சுதாரித்து சிறப்பாக ஆடிய குகேஷ் இப்போட்டியின் முதல் வெற்றியை ருசித்தார். டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் நடப்பு சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அனிஷ் கிரியுடன் நடந்த 5வது சுற்று போட்டியில் டிரா செய்தார்.
இதுவரை ஒரு வெற்றி கூட பதிவு செய்யாத பிரக்ஞானந்தா, 1.5 புள்ளிகள் மட்டும் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இத் தொடரில் ஹான் மோக் நீமான், நோடிர்பெக் அப்துஸட்டரோவ், ஜவோகிர் சிண்டாரோ ஆகியோர் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். குகேஷ் 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி 2.5 புள்ளிகள் பெற்று குகேஷுக்கு பின்னால் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் 1.5 புள்ளிகளுடன் பின்தங்கி உள்ளார். குகேஷ் அடுத்த சுற்றில் அப்துஸட்டோரோவ் உடன் மோதவுள்ளார்.
