×

74 ஆசிரியர்கள் மற்றும் 55 ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கோவி. செழியன்

 

சென்னை: 74 ஆசிரியர்கள் மற்றும் 55 ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணைகளை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். இன்று சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 74 ஆசிரியர்கள் மற்றும் 55 ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்குப் பொது இடமாறுதல் கலந்தாய்வு (General Transfer Counselling) மூலம் பணி மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் உயர்கல்வித் துறைக்கு பல்வேறு உன்னதத் திட்டங்களான ‘நான்முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ போன்றவற்றை செயல்படுத்தி வருகிறார்.

அத்துடன் தொழிற்கல்வி பயில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுடன் கல்வி விடுதி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றும் கொண்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி புகட்டிடவும், கல்லூரி நிர்வாகத்தினைத் திறம்பட நிர்வகிக்கவும் அண்ணா மேலாண்மை மையம் வாயிலாக அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் நிர்வாகப் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், மாநில உயர்கல்வி மன்றம் வாயிலாக அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் சிறந்த முறையில் நவீனப் பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி இணைய வழியாக விருப்பப் பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பொது இடமாறுதல் கலந்தாய்வில் மொத்தம் 265 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 218 தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவற்றில் தகுதிவாய்ந்த 74 ஆசிரியர்களுக்கும் மற்றும் 55 ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடமாறுதலுக்கான ஆணைகளை இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் என 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்காக 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ. 9.45 கோடி நிதி ஒப்பளிப்பு செய்ததற்கான ஆணைகளை கல்லூரி முதல்வர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறைச் செயலாளர் பொ. சங்கர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ச. விசாகன், மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Govi ,Sezhiyan ,Chennai ,Sezhian ,Minister of Higher Education ,Kovi ,Technical Education Drive ,
× RELATED ஸ்வெலெக்ட் எனர்ஜி நிறுவனம்: எரிசக்தி துறையில் புதிய அடையாளம்