நன்றி குங்குமம் தோழி
மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜியோகிராப் விரிகுடாவில் (Geographe Bay) உள்ள குயின்டலப் (Quindalup) என்ற இடத்தில் இருந்து தெற்கே 250 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இடம், மிக ரம்மியமான கடற்கரைகளுக்கு பேர் போனது. அங்கு ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் 48 வயது மிக்க ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் கடலை ரசிக்க சென்றிருக்கிறார். அப்போது அவர் தன் குழந்தைகளோடு கடலுக்குள் நீர் விளையாட்டு விளையாட முயல, கயாகி (kayaki) எனப்படும் நீர் படகு மற்றும் காற்றில் மிதக்கும் துடுப்பு பலகைகள் (paddle boards) பயன்படுத்தி கடலில் நீந்த முயல, எதிர்பார்க்காத அந்த ஆபத்து நிகழ்ந்திருக்கு.
ஆபத்துக்குக் காரணம் கடல் சீற்றம் இல்லை. குறிப்பிட்ட வகைக் காற்று. இதற்கு பெயர் ஆஃப்ஷோர் விண்ட் (offshore wind). அதாவது, கரையிலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று. இது அபாயகரமானது. காரணம், நாம் அந்தக் காற்றை உணர்வதற்கு முன்பே கரைக்கு திரும்ப முடியாத தூரத்துக்கு நம்மை உள்ளே இழுத்துச் சென்றுவிடும். குறிப்பா இந்தக் காற்று மிதக்கும் படகுகளுக்கு மிகப்பெரிய எதிரி. இதன் எடை கம்மியாக இருப்பதால், பலமான காற்றில் பட்டம் மாதிரி கடலுக்குள் போய்விடும். இந்த ஆஃப்ஷோர் காற்றுதான் மொத்த குடும்பத்தையும் கரையில இருந்து தூரமாக இழுத்துட்டுப் போயிருக்கு. சில நிமிஷங்களிலே கடற்கரை ரொம்ப தூரத்தில் அவர்களுக்கு தெரிய ஆரம்பிச்சது.
ஒருவிதமான பீதி அவர்களைச் சூழ, அந்தக் குடும்பத்தோட மூத்த பையனான 13 வயசு சிறுவன் சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கிறான். தன்னோட கயாக் மூலம் கரைக்கு திரும்ப போராடி இருக்கான். ஆனால், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால அலைகள் அவன் படகுக்குள் வரவே, ஒரு கட்டத்துல, இது சரிப்படாதுன்னு சிறுவனுக்கு புரிஞ்சிருச்சு. அந்த நொடி அவன் நம்ப முடியாத ஒரு முடிவை எடுக்கிறான்.
அதாவது, தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் சொல்லிவிட்டு கடல்ல குதிச்சு நீந்தியே கரைக்கு போய் உதவி கொண்டு வருவது என்பதுதான் அந்த முடிவு. இது ஏதோ ஸ்விம்மிங்ஃபூல்ல நீந்துற மாதிரியான விஷயம் இல்ல. கரையே தெரியாத தூரத்துல சில்லுன்னு இருக்கற சீற்றமான கடல்ல இந்த முடிவு எடுக்கறத நினைச்சு பார்க்கவே பயங்கரமானது.
கிட்டத்தட்ட நாலு மணி நேரம். நான்கு கிலோ மீட்டர் தூரம். (2.5 மைல்கள்) இருட்டு சூழ்ந்த அந்தக் கடல்ல சிறுவன் அசாத்திய துணிச்சலோடு தனியாக நீந்தியிருக்கான். அந்தச் சூழல்ல சிறுவனோட உள்ளுணர்வு தைரியமாக வேலை செஞ்சிருக்கு. தன் குடும்பத்தை காப்பாத்தணும்ங்கிற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே அவனை அப்படி நீந்த வச்சிருக்கு. அந்த சர்வைவல் மோடுல அவனோட குறிக்கோள் வேகம் மட்டும்தான்.
தன் குடும்பத்தை காப்பாத்தணும்ன்ற வேகம், அந்த வேகம் அவனோட உடல் வலிய… குளிர… பயத்தை என எல்லாவற்றையும் மறக்கடிச்சிருக்கு. சிறுவன் கடலுக்குள் நீந்திய அந்த 4 மணி நேரத்துல தன் குடும்பம் என்னாச்சோன்ற பயம் ஒரு பக்கம். கரையை அடைய முடியுமான்ற சந்தேகம் இன்னொரு பக்கம்னு… அவனின் மனப் போராட்டமே உண்மையான வீரமா இதில் இருந்திருக்கும்.
நாலு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கரையை அடைந்த சிறுவன் ஓய்வெடுக்கல. உடனே கத்தி கூச்சலிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, மேற்கு ஆஸ்திரேலியா தண்ணீர் காவல் துறை, உள்ளூர் கடல் மீட்புக்குழு ஹெலிகாப்டர்னு ஒரு பெரிய தேடுதல் வேட்டை தொடங்குது.மீட்புக் குழுவோட தலைவர் பால் பிரஸ்லேன்ட் சொல்றாரு, ‘அந்தப் பையன் முதல் 2 மணி நேரம் லைஃப் ஜாக்கெட்டோடதான் (life jacket) நீந்தியிருக்கான். ஆனா, நீந்த நீந்த அந்த லைஃப் ஜாக்கெட் அவனோட வேகத்தை குறைக்கத் தடையா இருக்கவே, லைப் ஜாக்கெட்டை கழட்டிட்டு அடுத்த ரெண்டு மணி நேரம் அது இல்லாமலேயே நீந்தி கரை சேர்ந்திருக்கான். சிறுவனின் இந்தச் செயல் மனித சக்திக்கு அப்பாற்பட்டது’ன்னு சொல்றார்.
குவின்டலப் கடற்கரையில இருந்த மீட்புக் குழு வேகமா கடலுக்குள் போக, சிறுவனின் புத்திசாலித்தனம் இதிலும் வெளிப்படுது. ராத்திரி நேரத்துல கடல் அலையில் சிக்கியவர்களைத் தேடுறது வைக்கோல் போர்ல ஊசியை தேடுறதவிட கஷ்டம். ஹெலிகாப்டர்ல இருக்கற இன்ஃபராரெட் கேமராக்கள் கடல் தண்ணில மிதக்கிற உடல்களை கண்டுபிடிக்க சில சமயம் சிரமப்படலாம் என்பதால், அந்தச் சூழல்ல அந்தப் பையன் கொடுத்த துல்லியமான தகவல் உதவுது.
தன்னோட கயாக் அப்புறம் தம்பி, தங்கச்சிங்க இருந்த மிதக்கும் படகுகளோட நிறங்களை துல்லியமா ஞாபகம் வச்சு மீட்புக் குழுவுக்கு அவன் சொல்ல, இந்த தகவலால் மீட்புக் குழு கடலில் தேடுற பரப்பளவைக் குறைச்சு, சரியான திசையில தேடத் தொடங்கி, ஒரு மணி நேரத்துக்குள்ளயே சிறுவனின் உடைஞ்ச கயாக்க கண்டுபிடிச்சிட்டாங்க. சிறுவன் கரையில நின்னு தன் குடும்பத்தை காப்பாத்த போராடிட்டு இருந்த அதே நேரத்துல கடலோட நடுவுல அந்த தாயும் மத்த ரெண்டு குழந்தைகளும் வேறுவிதமான, இன்னும் பயங்கரமான ஒரு போராட்டத்தை நடத்திக்கிட்டு இருந்திருக்காங்க.
47 வயசான அந்தப் பெண் தன்னோட 12 வயசு மகன் மற்றும் 8 வயசு மகளோட கரையிலிருந்து கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் தூரத்தில ஒரு சின்ன மிதக்குற படகை பிடிச்சுக்கிட்டு பல மணி நேரம் கடல் அலையில் சிக்கி தத்தளிச்சிருக்காங்க. தன் 13 வயசு மகனை உதவி தேடி கடலுக்குள் நீந்த அனுப்புனது ஒரு தாய்க்கு எவ்வளவு கஷ்டமான முடிவா இருந்திருக்கும்னு யோசிச்சு பார்க்கவே பயங்கரமா இருக்கு.ஒருவேளை சிறுவனுக்கும் ஏதாவது ஆயிட்டா என்ன பண்றதுன்ற பயம் நிச்சயம் அந்த தாய்க்கு இருந்திருக்கும்.
ஆனாலும், அந்தச் சூழ்நிலையில அதுதான் ஒரே வழின்னு அவங்க நம்பி இருக்கலாம். நம்பிக்கையில தாய் எடுத்த முடிவு இது. நேரம் ஆக ஆக இருட்டு சூழ்ந்திருக்கும். குளிர் அதிகமாகி இருக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிருக்கும். மீட்புக் குழு அவங்களை ராத்திரி 8:30 மணிக்கு கண்டுபிடிச்சப்போ, அந்த தாய் உடல் ரீதியா ரொம்ப சோர்ந்து போயிருந்திருக்காங்க.
மீட்புக் குழு தலைவர் பால் பிரஸ்லேன்ட் அந்த தாயோட மனநிலையையும் விவரிக்கிறாரு. ‘என்னால முடியலன்னு சொல்ற நிலைமையில இருந்தும் தன் ரெண்டு குழந்தைகளும் தன் முகத்தையே பார்க்கறதை கண்டு, மன உறுதியை விடாம அவங்களை ஒண்ணா பிடிச்சு வச்சிருந்ததா’ அவர் சொல்றாரு. அந்த தாயும் உண்மையான ஹீரோதான். தனது ரெண்டு குழந்தைகளையும் ஒண்ணா வச்சு நம்பிக்கையை இழக்காம இருந்தது நம்ப முடியாததுன்னு அவரும் மீட்புக் குழுவினரும் சொல்லி இருக்கும் செய்தி.
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி சொன்ன மாதிரி அந்த தாயும் மத்த ரெண்டு குழந்தைகளும் லைஃப் ஜாக்கெட் போட்டிருந்தது அவங்க உயிர் பிழைச்சதுக்கு மிக முக்கிய காரணம். இது கடல் பாதுகாப்போட அவசியத்தை ஞாபகப்படுத்தும் அதே சமயம், லைஃப் ஜாக்கெட்டை கழட்டுனதாலதான் அந்தப் பையனால வேகமா நீந்தி உதவி கொண்டுவர முடிஞ்சது. ஒரே நிகழ்வுல விதியை பின்பற்றுனதும் விதியை மீறுனதும் உயிர்களை காப்பாத்தி இருக்குன்னு புன்னகைத்தவர், சிறுவனின் துணிச்சலான செயல் ‘மனித சக்தியால் இயலாத ஒன்று’ (Superhuman) என்றும், அவனது மன உறுதியே குடும்பத்தைக் காப்பாற்றியது என்றும் பாராட்டினார்.
கடைசியில பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அந்த தாயும் ரெண்டு குழந்தைகளும் மீட்புக் குழுவினரால பத்திரமா மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டாங்க. அங்கிருந்த பாராமெடிக்கல் ஆம்புலன்ஸ் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்து, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, பிறகு நால்வரும் பத்திரமா வீடு திரும்பிட்டாங்க. தங்களை காப்பாத்தின கடல் மீட்புக்குழுவினரை நேர்ல சந்திச்சு அந்தக் குடும்பம் நன்றியும் சொல்லி இருக்காங்க.
13 வயது சிறுவன் நீந்தாம போயிருந்தா யாருக்குமே இந்த விபத்து நடந்ததே தெரிஞ்சிருக்காது. அதே சமயம், அந்த தாய் தன் மன உறுதியை இழந்திருந்தா மீட்புக்குழு வரும் வரை ரெண்டு குழந்தைகளையும் காப்பாத்தி இருக்கவும் முடியாது. இந்த சம்பவத்தில் ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல. உண்மையில ஒன்னை விட ஒன்னு உயர்ந்தது. இல்லை ரெண்டும் ஒன்னோட ஒன்னு இணைந்ததுதான் இந்த வெற்றியை கொடுத்திருக்கு.
உடல் வலிமையும் மன உறுதியும் ஒருசேர வேலை செஞ்சதால மட்டும்தான் இந்தக் குடும்பம் உயிர் பிழைச்சது. மனித மனத்தின் ஆற்றலுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கறதோட முக்கியத்துவத்துக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
