சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதில் 13 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் மாநிலம் முழுவதும் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்திற்குள் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர். நீக்கப்பட்டதற்கு காரணமாக வாக்காளர் உயிரிழப்பு, முகவரியில் இல்லை, குடி பெயர்ந்தோர், இரட்டை பதிவு என்று காரணத்தை தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் நிறைய வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்று அவ்வப்போது நடத்தப்பட்டது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பலரும் ஆர்வமுடன் சென்றனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சிறப்பு முகாம்களுக்கு வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.
இந்த நிலையில், விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 18ம் தேதியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. கடைசி நாள் என்பதால் நிறைய பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சத்து 3487 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை, பெயரை நீக்க என படிவம் 7ஐ 35 ஆயிரத்து 646 பேர் சமர்ப்பித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் அளித்துள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும். அதன் பிறகு பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
