×

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை கூட்ட நெரிசலில் மாயமான குழந்தைகள் உட்பட 20 பேர் டிரோன் கேமரா மூலம் மீட்பு: சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை: காணும் பொங்கல் முன்னிட்டு மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் கூட்ட நெரிசலில் மாயமான 12 குழந்தைகள் உட்பட 20 பேரை போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் பத்திரமாக மீட்டனர். மேலும், பொங்கல் பண்டிகையில் குற்றங்கள் நடக்காமல் சிறப்பாக பணியாற்றிய அனைத்து போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரடி கண்காணிப்பில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் 16 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய கடற்கரைகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மணல்பரப்புகளில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும், கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலம் சிறப்பு கட்டுப்பாட்டறைகளில் கண்காணித்தும், ரோந்து வாகனங்கள், மணல்பரப்பில் செல்லக்கூடிய வாகனங்கள், குதிரைப்பட மற்றும் ரோந்து காவலர்கள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.

கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்கான சென்னை பெருநகர காவல்துறை சார்பில் குழந்தைகள் கைகளில் அடையாள அட்டை அணிவிக்கப்பட்டது. அந்த அட்டையில் பெற்றோரின் விபரங்கள், குழந்தையின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் அண்ணாசதுக்கம் காவல் எல்லைக்குட்பட்ட உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலான மணல்பரப்பில் மாயமான சிறுவன், சிறுகிகள் என மொத்தம் 8 குழந்தைகளை போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் பத்திரமாக மீட்டகப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 மூதாட்டிகள், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபர், வியாசர்பாடியை சேர்நத் பெண், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் என 8 வயதான நபர்கள் என மொத்தம் அண்ணாசதுக்கம் காவல் எல்லையில் 16 பேரை போலீசார் பத்திரமாக மீட்டு குழந்தைகளை பெற்றோரிடமும் முதியவர்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் மெரினா காவல் எல்லையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் கூட்ட நெரிசலில் மாயமானதாக ஒரு சிறுமி மீட்கப்பட்டார். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கூட்ட நெரிசலில் மாயமானதாக 3 குழந்தைகள் மற்றும் 8 முதியவர்களை சாஸ்திரி நகர் போலீசார் மீட்டனர். அந்த வகையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைகளில் மாயமானதாக 12 குழந்தைகள் உட்பட 20 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு எந்த வித குற்ற சம்பவங்கள் இன்றி சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட 16 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Police Commissioner ,Arun ,Chennai ,Pongla ,Marina ,Elliot ,Pongal ,Pongal festival ,
× RELATED இன்றே டெல்லி விரையும் தவெக தலைவர் விஜய்!