×

தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்பசு மையம் அமைக்கப்படுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஒன்றிய மதிப்பீட்டு குழு கோரிக்கை

சென்னை: இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் பாக் வளைகுடாவில் காணப்படுகின்றன.

இதை தொடர்ந்து இவற்றை பாதுகாக்க பாக் வளைகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக் வளைகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 448 கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதி கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறையின் மதிப்பீட்டு நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் கட்டுமானங்கள் அமைக்க கூடாது. சுமார் 22 ஆயிரம் சதுர அடியில் இந்த கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்த திட்டம் உள்ள பகுதி முழுவதும் கடற்கரை பாதுகாப்பு மையத்திற்குள் வருவதால் சதுப்பு நிலங்கள், சேற்று நிலங்கள், கடற் புற்கள் அழிய நேரிடும். எனவே, இந்த முடிவை மறு பரிசீலனை செய்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Tags : Union Evaluation Committee ,Tamil Nadu government ,Thanjavur ,Chennai ,India ,Tamil Nadu ,
× RELATED துபாயில் நடந்த கார் பந்தயத்தில்...