குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். நேற்று மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), நசீர் உசேன் (33), உஸ்மான் (36) ஆகியோர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த 30 அடி உயர மண் சரிந்து விழுந்தது. இதில் 3 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் அப்துல் ரகுமான் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பின்னர் மூச்சுத்திணறி உயிரிழந்த நசீர் உசேன், உஸ்மான் ஆகியோர் சடலங்கள், பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்பட்டன.
