பெய்ஜிங்: சீனாவின் எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை குறைப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சீன அதிபரின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்றுள்ளார். சீனா சென்ற பிரதமர் மார்க் கார்னிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிபர் ஜீ ஜின்பிங்கை அவர் சந்தித்தார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இது தொடர்பாக அதிபர் ஜீ ஜின்பிங் கூறுகையில், ‘‘இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மீட்டெடுப்பது மற்றும் மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மார்க் கார்னியிடம் அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளில் சீனாவுக்கு வருகை தரும் முதல் பிரதமர் என்ற பெருமையை மார்க் கார்னி பெற்றுள்ளார். பிரதமர் மார்க் கார்னி, புதிய உலகளாவிய யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு ஒரு புதிய உறவு மற்றும் விவசாயம், எரிசக்தி மற்றும் நிதித்துறைகளில் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் பிரதமர் கார்னி, ‘‘கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரம்பு 49ஆயிரம் என்று நிர்ணயிக்கப்படும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70ஆயிரமாக உயரும். சீனாவின் எலக்ட்ரிக் கார்கள் மீதான கனடாவின் 100 சதவீத வரி குறைக்கப்படும். கனடாவின் முக்கிய ஏற்றுமதி பொருளான கனோலா விதைகளுக்கான வரியை சீனா சுமார் 84சதவீதத்தில் இருந்து 15சதவீதம் ஆக குறைக்கும்” என்றார்.
