×

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் 13 பேருக்கு விருது: தல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ‘அண்ணா’ விருது வழங்கப்பட்டன. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025ம் ஆண்டுக்கான பெரியார் விருது, அம்பேத்கர் விருது, அண்ணா விருது, காமராசர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, விசுவநாதம் விருது, கலைஞர் விருது, 2025ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது மரபுத்தமிழ், ஆய்வுத் தமிழ் மற்றும் படைப்புத்தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று விருதுகள் என மொத்தம் 13 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் என கடைபிடிக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004ம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருவது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – மு.பெ.சத்தியவேல் முருகனார், 2025ம் ஆண்டுக்கான பெரியார் விருது – வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது – சிந்தனைச் செல்வன், அண்ணா விருது – அமைச்சர் துரைமுருகன், பெருந்தலைவர் காமராசர் விருது – இதயத்துல்லா, மகாகவி பாரதியார் விருது – ஜெயந்தா, பாரதிதாசன் விருது – யுகபாரதி, தமிழ்த் தென்றல் – திரு.வி.க. விருது – முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, விசுவநாதம் விருது – செல்லப்பா, கலைஞர் விருது – விடுதலை விரும்பி என மொத்தம் 10 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பட்டது. அதேபோல், பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்கு மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய மூன்று வகைப்பாட்டில் ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் ராமலிங்கம், ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் எழுத்தாளர் மகேந்திரன், படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் நரேந்திரகுமார் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கிய மாமணி விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இலக்கிய மாமணி விருது பெற்ற விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், எஸ்.எஸ்.பாலாஜி, பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Thiruvalluwar ,Government of Tamil Nadu ,Talwar Mu. K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Water Minister ,Duraimurugan ,Valluwar Kottai ,Thirunalaioti ,Tamil Development Department ,
× RELATED சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன்...