×

பொங்கல் பூ சிறப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் இவற்றுடன் சேர்த்து பொங்கல் பூவையும் சேர்த்து படைப்பார்கள். இந்த பொங்கல் பூ என்பது கண்ணுப்பிள்ளை எனும் குற்றுச் செடியின் பூக்களாகும். இந்தப் பொங்கல் பூ பொதுவாக மார்கழி – தை மாதங்களில் தான் அதிகளவு காடுகள், தோட்டங்கள், சாலை ஓரங்கள் என எங்குப் பார்த்தாலும் வெள்ளை நிறப் பூக்களுடன் பூத்து நிறைந்து காணப்படும். இச்செடியை பொங்கல் பண்டிகையின் போது வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

அந்தக் காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறங்களில் உள்ள கூரை வீடுகளின் வாசலில் இந்தப் பூவை சொருகி வைப்பார்கள். இப்படி தலைவாசலில் வைக்கப்படுவதால் இந்தப் பூவுக்கு கூரைப்பூ என்றும் பொங்கல் பண்டிகையின் போது வைப்பதால் பொங்கல் பூ என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டுக்கு மங்களம் தரக் கூடியதாகவும், பொங்கலை வரவேற்பதன் அடையாளமாகவும் இந்த பூ வைக்கப்படுகிறது. இதனுடன் மாவிலை, ஆவாரம்பூ, வேப்பிலை போன்றவற்றையும் சேர்த்து கட்டுவர்.

மார்கழி கடைசியில் பழையதை போக்க போகியும், பின் புதியவை புகுவதற்கு தையும் உதவுகிறது. இப்படி புதிதாக பிறக்கும் தைத் திருநாளை வரவேற்க வீட்டின் கூரையில் இந்த பூவை காப்பு கட்டிய பிறகே பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. வாசலில் வைக்கும் இந்த பொங்கல் பூ கொத்தில் கட்டப்படும் மா இலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும்.

கூரைப் பூ (கண்ணுப்பிள்ளை பூ) பூச்சிகள் வீட்டிற்குள் வருவதை தடுக்கும். வேப்பிலை விஷமுறிவுக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்புத் தன்மையை தருகிறது. மேலும் கொசுக்களை தடுக்கும் ஆற்றலும் வேப்பிலைக்கு உண்டு, ஆவாரம் பூ தோல் நோய்களை தடுக்கும் எனவே, மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கும் அந்த சமயத்தில், இந்த தாவரங்களை மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்க விடுவதால் பருவக்கால தொற்று நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு.

எனவேதான் இதனை வீட்டு வாசலில் கட்டி வைக்கின்றனர். மேலும், வீட்டிற்கு மங்களம் பெருகுவதுடன் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.கூரைப் பூவில் ஆறுவிதமான வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.கிராமங்களில் அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் கூரைப்பூக்களை இன்றும் பயன்படுத்தி பலன் பெறுகின்றனர்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Tags : Dr. ,Pongal ,
× RELATED மீன் பேஸ்ட் உடலுக்கு நல்லதா?