நன்றி குங்குமம் டாக்டர்
முதுகுத்தண்டு தொடர்பான பிரச்னைகள் நீண்ட காலமாகவே அறியப்பட்ட ஒன்றாகும். கடந்த பல நூற்றாண்டுகளாக, இதற்கான சிகிச்சை முறைகள் சாதாரண பராமரிப்பு முறைகளிலிருந்து, இன்றைய மிகத் துல்லியமான மற்றும் நவீன அறுவை சிகிச்சை முறைகளாக வளர்ச்சி அடைந்துள்ளன. இப்போதும் கூட, பெரும்பாலான முதுகுத்தண்டு பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை.
மருந்துகள், பிசியோதெரபி, வாழ்க்கை முறை மாற்றங்கள், சரியான முறையில் உட்காரும் பழக்கம், முதுகுத் தசை பயிற்சிகள், பெல்ட் அணிவது மற்றும் ஊசி மூலம் வலி நிவாரணம் போன்ற எளிய முறைகளிலேயே பல பிரச்னைகளைச் சரிசெய்துவிடலாம் என்கிறார் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை மூத்த ஆலோசகர் மருத்துவர் ஃபானி கிரண் எஸ். மேலும், இது தொடர்பாக அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை என்பது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நரம்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், விலகிய எலும்புகளைச் சீரமைக்கவும் அல்லது நரம்புப் பிரச்னைகள் மோசமாவதைத் தடுக்கவும் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக அமைகிறது. இயல்பாகவே, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை என்றாலே மக்கள் பயப்படுவார்கள். இதில் பெரும்பாலானவை பழைய தவறான கருத்துக்களால் வந்தவை. உண்மையில், நவீன நோயறிதல் கருவிகள், மேம்பட்ட தொழில்நுட்பம், தரமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களின் சிறப்புப் பயிற்சி ஆகியவற்றால், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை இன்று முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.
பயம் மற்றும் தவறான கருத்துக்கள் ஏன்?
முதுகுத்தண்டு என்பது உடலின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். இது உடலைத் தாங்கிப் பிடிப்பது மட்டுமல்லாமல், மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் தண்டுவடம் மற்றும் நரம்புகளையும் பாதுகாக்கிறது. இந்த நரம்பு அமைப்புகள் மிக மென்மையானவை என்பதால், இதில் அறுவைசிகிச்சை செய்வது அதிக ஆபத்தானது என்று மக்கள் நினைக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, முதுகுத்தண்டு செயல்பாடு குறித்த புரிதல் குறைவாக இருந்தது. மேலும் அக்காலத்தில் நம்பகமான மருத்துவ கருவிகளோ, துல்லியமான ஸ்கேன் வசதிகளோ அல்லது மேம்பட்ட அறுவை சிகிச்சை முறைகளோ இல்லை. இதனால் அக்காலத்தில் சில சிகிச்சைகளின் முடிவுகள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை. இதுவே மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில், நவீன பாதுகாப்பு வழிமுறைகளுடன், சரியான காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்படும்போது, அந்த மாதிரியான பாதிப்புகள் என்பது மிக அரிதான ஒன்றாகும்.
எப்போது அறுவைசிகிச்சை அவசியம்?
பெரும்பாலான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். ஆனால் சில சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது, நரம்பு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும் போது (உதாரணமாக: கை அல்லது காலில் அதிகரிக்கும் பலவீனம், பாதம் தொங்குதல், மரத்துப்போதல் அல்லது நடப்பதில் சிரமம்), சிகிச்சைகளுக்குப் பிறகும் தீராத கடுமையான வலி இருந்து, அது தூக்கம், வேலை மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் போது; முதுகெலும்பு விலகி இருத்தல், விபத்தினால் ஏற்படும் நிலையற்ற தன்மை அல்லது நோய்த்தொற்று மற்றும் கட்டிகளால் ஏற்படும் பாதிப்புகள்; கூன் முதுகு அல்லது முதுகு வளைவுப் பிரச்னைகள் அதிகமாகி உடலின் தோற்றத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கும் போது; சில அவசர நிலைகளான சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழத்தல், நரம்புகளை பாதிக்கும் நோய்த்தொற்றுகள் அல்லது தண்டுவடத்தை அழுத்தும் கட்டிகள் போன்றவை இருந்தால் அவசர அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.வெற்றிகரமான சிகிச்சைக்கு மிக முக்கியமானது, நோயாளியின் பிரச்னையைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான்.
துல்லியமான பரிசோதனைகள்
துல்லியமான பரிசோதனைகள் இன்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் நவீனத் தொழில்நுட்பம். எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் மூலம் நரம்பு மற்றும் எலும்பு பிரச்னைகளை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. இதனால் மருத்துவர்களால் சிகிச்சையைச் சரியாகத் திட்டமிட முடிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அறுவை சிகிச்சைக்கு முன்பே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், எலும்பு உறுதியை மேம்படுத்துவதிலும் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். புகைபிடிப்பதை நிறுத்துவது மற்றும் சிகிச்சைக்குத் தயாராவது பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது.
ரோபோட்டிக் மற்றும் நேவிகேஷன் தொழில்நுட்பம்
இன்றைய நவீன அறுவை சிகிச்சை அரங்களில் ‘கம்ப்யூட்டர் நேவிகேஷன்’ மற்றும் ‘ரோபோட்டிக்’ வசதிகள் உள்ளன. இவை அறுவை சிகிச்சையின் போது மிகத் துல்லியமாகச் செயல்பட உதவுகின்றன. இதனால் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
நரம்புகளுக்குப் பாதுகாப்பு
சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது, நரம்புகள் பாதிக்கப்படாமல் இருக்க ‘நியூரோ மானிட்டரிங்’ என்ற நவீன வசதி உள்ளது. இது அறுவை சிகிச்சையின் போதே நரம்புகளின் செயல்பாட்டைக் கண்காணித்து, நரம்புகளுக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டால் உடனே மருத்துவக் குழுவை எச்சரிக்கும். இது பக்கவாதம் போன்ற பாதிப்புகளைத் தடுக்கிறது.
நுண்துளை அறுவைசிகிச்சை
இப்போது பல பிரச்னைகளுக்குப் பெரிய அளவில் கிழித்து அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. ‘மினிமலி இன்வேசிவ்’ எனப்படும் சிறிய துளையிட்டுச் செய்யும் முறை மூலம் வலி குறைவு, ரத்த இழப்பு குறைவு மற்றும் நோயாளிகள் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம்.
சிறப்பு மருத்துவர்கள் நவீன மருத்துவப் பொருட்கள் மற்றும் சிறந்த வலி நிவாரண முறைகளால் நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் விரைவாக நடக்கத் தொடங்கலாம். முதுகுத்தண்டுக்கென சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், சரியான காரணத்திற்காக மட்டுமே அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பதால், இது முழுமையான பலனைத் தருகிறது.
நவீனக் கண்டுபிடிப்புகளால் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை இன்று நம்பகமானதாகவும், மிகவும் பாதுகாப்பானதாகவும் மாறியுள்ளது. எனவே பயம் தேவையில்லை; முதுகுத்தண்டு பிரச்சனை இருந்தால், தகுந்த சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது என்கிறார் மருத்துவர் ஃபானி கிரண்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
