×

திசையெங்கும் ஒலிக்க இருக்கும் குலவை சத்தம்…பொங்கல் கொண்டாட்டத்திற்கு தமிழர்கள் தயார்

*பொருட்கள் விற்பனை படுஜோர்

*ரயில், பஸ் நிலையங்களில் மக்கள்  கூட்டம்

மதுரை : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று (ஜன.14) போகியுடன் துவங்கும் நிலையில், பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். வெளியூர் செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

உழவு செய்து, விதைத்து, விளைச்சல் காணும் உழைப்பை உலகுக்கு உணர்த்துவதுடன், அந்த உழைப்பில் விளைந்தவற்றை உவகையோடு சமைத்தெடுத்து உறவுகளோடு பரிமாறிக் களிக்கும் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இதற்கு தமிழர் திருநாள் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இதன்படி பொங்கலுக்கு முதல்நாளான போகித் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. வடமாநில மக்கள் வீட்டின் வீணான பொருட்களையெல்லாம் ரோட்டுக்கு கொண்டு வந்து கொட்டி நெருப்பிட்டுக் கொளுத்திடும் நிலையில், தமிழக மக்கள் வீடு பெருக்கி, வெள்ளையடித்து, தூசு துரத்துவதை ‘போகி’யாக கடைபிடிக்கின்றனர். புதுப்பெண் வீட்டார் மணமகன் வீட்டிற்கு தலைப்பொங்கல் சீர் அனுப்புவதும் இன்று நடக்கும்.

இன்றைய போகியை தொடர்ந்து, நாளை பொங்கல், அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்பது களை கட்டுகிறது. பொங்கல் பொருட்கள் வாங்கும் கூட்டத்தால் மதுரை மாநகரின் அத்தனை கடைத்தெருக்களும் மக்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

கரும்பும், மஞ்சளும் குவியத்தொடங்கியுள்ளன. பொங்கலுக்கு முக்கியமான கூரைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை போன்றவை அதிகம் விற்னைக்கு வந்துள்ளன. பருத்த பனங்கிழங்குகளும் குவிந்திருக்கிறது. மண் பானையில் பொங்கல் வைக்கும் பண்பாடு தொடர்வதால், மதுரையில் அவற்றின் விற்பனையும் வேகமடைந்துள்ளது.

இவற்றுடன் மஞ்சள் கிழங்கு, பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய், மண்டைவெல்லம், நெய், வெண்கலப் பாத்திரங்களும் கூடுதல் விற்பனை கண்டு வருகிறது. கிராமங்கள் தோறும் ‘பொங்கல் சந்தை’ நேற்று துவங்கி நடந்து வருகிறது.

பூக்கள் விலையும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. ஜவுளிக்கடைகளில் தமிழர் உடையான வேட்டி, சட்டைகளுடன், கைத்தறிச் சேலைகள் விற்பனையும், தலைப் பொங்கல் சீருக்கென பொருட்கள் வாங்கும் கூட்டமும் அதிகரித்துள்ளன.

இதேபோல், பொங்கலுக்கென்றே சிறப்பாக தேவைப்படும் காய்கறிகளும் பெருமளவில் விற்பனைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக சிறு கிழங்குகள், சர்க்கரைப் பூசணி, பச்சை மொச்சை, வாழைக்காய் உள்ளிட்டவற்றின் விற்பனை எகிறுகிறது.

இத்துடன் நாளை மறுநாள் கொண்டாடும் மாட்டுப்பொங்கலுக்கென மாடுகள் அணியும் சலங்கைகள், கழுத்து மற்றும் மூக்கணாங்கயிறுகள், வெங்கல மணிகள், கழுத்துப்பட்டைகள், கொம்புகளை அழகுபடுத்தும் வண்ணப்பொடிகள் என மாட்டுப்பொங்கல் சார்ந்த பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளன. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலை குறிவைத்து, சுற்றுலா இடங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

பஸ்கள், ரயில்களில் கூட்டம்…

இன்று (ஜன.14) போகி பண்டிகை நாள் முதல் கல்வி நிலையங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர்களில் இருந்து மதுரைக்கும், இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கும் மக்கள் தங்கள் படையெடுப்பை துவங்கியுள்ளனர்.

இதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும், விடுப்பு பெற்று சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் எகிறியுள்ளது.

இவர்களின் வசதிக்காக ரயில்வே, தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், ஆம்னி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. அரசு போக்குவரத்துக்கழகு அதிகாரிகள் மதுரை பஸ் ஸ்டாண்ட்களில் பணியில் இருந்து, அடுத்தடுத்த பேருந்துகளில் பயணிகளை அனுப்பி வைக்கின்றனர்.

புகையில்லா போகி நன்மை தரும்…!

சுற்றுச்சசூழல் பாதுகாப்புடன் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து, கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், முன்னோர்கள் போகியை கொண்டாடினர்.

இயற்கை பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் காற்று மாசடையவில்லை. தற்போது பழைய பிளாஸ்டிக், செயற்கை இழை துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று கடுமையாக மாசடைகிறது.

கடும் புகையால் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உருவாகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், போகிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : kulavai ,Tamilians ,Pongal ,Madurai ,Pongal festival ,Tamil Nadu ,Bhogi ,
× RELATED பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென்...