×

வேட்டி, சேலை அணிந்து மாட்டு வண்டியில் வந்த அலுவலர்கள் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

*களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்

ராணிப்பேட்டை : வேட்டி, சேலை அணிந்து மாட்டு வண்டியில் வருகை தந்து பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘தமிழர் திருநாளாம் தை பொங்கலை’ கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். பொங்கல் விழாவிற்கு தமிழர் பாரம்பரிய முறையில் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் வேட்டி, சேலை அணிந்து
மாட்டு வண்டியில் வருகை புரிந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வண்ண கோலங்கள் போட்டு, வாழை தோரணங்கள் கட்டி பாரம்பரிய முறையில் பொங்கல் விழா நடந்தது.

சூரிய பகவானுக்கு கலெக்டர் சந்திரகலா பொங்கலிட்டார். அப்போது அனைவரும் பொங்கல் பொங்கி வந்தவுடன் பொங்கலோ பொங்கல் என ஆரவாரமாக கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிற்பகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருபடத்தை வருவாய்த்துறையினர் கோலப்பொடியில் தத்ரூபமாக வரைந்து தமிழ்நாடு அரசின் சமத்துவ பொங்கல் விழா என எழுதி பொங்கல் விழா கொண்டாடினர்.

இந்த பண்டிகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், நடனம் நிகழ்ச்சி, தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பம் என பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உற்சாகமாக பங்கேற்றனர். இதனை அனைவரும் கண்டுகளித்தனர். சமத்துவ பொங்கல் விழாவால் கலெக்டர் அலுவலகம் விழா கோலம் பூண்டது.

முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டின மாணவ, மாணவிகளும், வருகை புரிந்த தமிழர்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ தனலிங்கம், திட்ட இயக்குனர் சரண்யா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், பேரிடர் தாசில்தார் ரூபிபாய், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஞானசேகரன், தாசில்தார் ஆனந்தன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலவை: திமிரி அடுத்த காவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா நேற்று வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. மருத்துவர்கள் ஜோதி, நேதாஜி, நிலா, தனியார் பள்ளி நிர்வாகி சேட்டு வரவேற்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் கரும்பு, மஞ்சள், பானை வைத்து பொங்கல் வைத்தனர். இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Tags : KALAYAGATIYA ART PERFORMANCES ,RANIPETTA ,SAMATUWA PONGAL FESTIVAL ,Tamil Thirunalam Thai Pongala ,Ranipet Collector's Office Complex ,
× RELATED பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென்...