×

குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை அருகே நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து கரையைக் கடந்த பின், காற்றழுத்தமாக மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று வரை நீடித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் கடலூர், மதுரை மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது. தஞ்சாவூர், சென்னை, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது.

கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிகவும் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில், குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை ெகாண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும்.

குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்துக் கொண்டு இருப்பதால் கிழக்கு திசையில் இருந்து காற்று மேற்கு நோக்கி செல்வதால், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள் தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் கடும் குளிர் நிலவும். அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும்.

Tags : Kumari Sea ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Sri Lanka ,Gulf of Mannar ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...