×

அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும் 72வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
* சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக காவல்துறை டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மத்திய, மாநில அரசு வக்கீல்கள்,  வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  நீதித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு விதிகள் காரணமாக வழக்கமாக நடைபெறும் சிஐஎஸ்எப் வீரர்களின் சாகச நிகழ்ச்சி  இந்த ஆண்டு நடத்தப்படவில்லை.
* தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் நடந்த விழாவில் பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், உறுப்பினர்கள் பிரிசில்லா பாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
* பாரிமுனையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில்  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவருமான ச.தமிழ்வாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  இந்த விழாவில் மாநில நுகர்வோர் ஆணையத்தின் பதிவாளர் ஆர்.மேத்யூ எடி, நீதிசாரா உறுப்பினர் எஸ்.எம்.லதா மகேஸ்வரி, வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* எழிலகம் வளாகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு ஆணையர் வெங்கடாச்சலம், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ரமண சரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை உதவி ஆணையர் கவெனிதா, அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
* சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கமிஷனர் கோ.பிரகாஷ் தேசிய கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் காலதாமதமில்லாமல் உரிய காலத்திற்குள் முறையாக சொத்துவரி செலுத்திய கொத்தவால் சாவடியை சேர்ந்த விக்ரம்குமார், மயிலாப்பூரை சேர்ந்த ஆர்.பானுமதி மற்றும் சோழிங்கநல்லூர் குமாரசாமி நகர் பிரதான சாலையில் உள்ள விஸ்வநாத் டொண்டி ஆகியோரை கவுரவித்து பாராட்டு கடிதம் வழங்கினார். மேலும் சென்னை மாநகராட்சியில் அனைவருக்கும் முன்மாதிரியாக சீரிய முறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 89 பேரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
* சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி தேசிய கொடியேற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான பங்கஜ்குமார் பன்சால் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
* கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் சுஜாதா ஜெயராஜ் (நிதி), ராஜீவ் நாரயணன் திவேதி (திட்டங்கள்), ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் அமைப்புகள்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.
* சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் மேலாண்ணை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) இளங்கோவன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
* அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பாளர் டாக்டர் ஹூசைனி தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் ஆர்எம்ஓ பூமா, ஆறுமுகம், சரவணன், குணசேகரன், பஞ்சுநாதன், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில், மாநில தேர்தல் ஆணையர் ரா.பழனிச்சாமி தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
* ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவர் பாஸ்கரன், தேசிய கொடியே ஏற்றி வைத்தார். இதில் உறுப்பினர்கள் துரைஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன் தாஸ், சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* சென்னை துறைமுகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் அதன் தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
* எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
* சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டீன் தேரணிராஜன், ஓமந்தூரர் அரசினர் மருத்துவமனையில் முதல்வர் ஜெயந்தி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயக்குனர் மணி ஆகியோர் ேதசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
* மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இயக்குனர் சுனில் தத் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
* அண்ணாநகரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலக வளாகத்தில் அதன் செயல் இயக்குனர் ஆர்.கே.தஸ்மானா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  இதில் பொதுமேலாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
* பெரம்பூர் ரயில்வே ஸ்டேடியத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆர்பிஎப் வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் பீரேந்திர குமார், கூடுதல் பொது மேலாளர் பிஜி. மல்லியா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
* நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ள ஆயக்கர் பவனில் நடந்த குடியரசு தின விழாவில் வருமானவரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை ஆணையர் எம்எல்.கர்மாஹர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.   
அதே பகுதியில் உள்ள மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறை அலுவலக வளாகத்தில் அதன் தலைமை கமிஷனர் ஜி.வி.கிருஷ்ணா ராவ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அதன் முதன்மை கமிஷனர் விஎஸ்.சவுதாரி தேசிய கொடியேற்றி வைத்தார்.

Tags : Government Offices ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு...