×

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறப்பு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொடுங்கையூரை சேர்ந்த கோபியின் 5 வயது குழந்தை தனிஷ்காவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்த நிலையில், மறுநாள் பரிதாபமாக இறந்தது. டாக்டர்களின் கவனக்குறைவால் தனது குழந்தை இறந்ததாகவும், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோபி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவக்கல்வி இயக்குனரின் அறிக்கை மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. மேலும் குழந்தை இறந்தது மனுதாரருக்கு தாங்க முடியாத இழப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாபமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Tags : Human Rights Commission ,Tamil Nadu ,infant deaths ,
× RELATED பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன்...