×

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க பூமிபூஜை

வேதாரண்யம், ஜன. 26: வேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. நாகை எம்பி செல்வராசு தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்.பி.நாயர் முன்னிலை வகித்தார். மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூமிபூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பின் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:
ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு துறைமுகம் இல்லாததால் 2014ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் மீன்பிடி படகுகள் சேதமடைந்தது. 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் மீனவ மக்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான கடல் நீரியல் ஆய்வு மற்றும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தம் செய்வது தொடர்பான மாதிரி ஆய்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆறுகாட்டுத்துறை தென்புறம் 2,000 மீட்டர் நீளம், வடபுறத்தில் 1,650 மீட்டர் நீளத்துக்கு அலை தடுப்புச்சுவர்கள் அமைப்பதற்கும், படகுகள் நிறுத்தம் செய்வதற்கும் தேவையான படகு அணையும் துறை, படகுகள் போக்குவரத்துக்கு தேவையான தூர்வாரும் பணி மற்றும் துறைமுகத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இத்திட்டத்தில் ஏற்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தில் 64 விசைப்படகுகள், 376 கல்நாரிழை படகுகள் பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பையன், திலீபன், வேதாரண்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : fishing port ,fishing village ,Arukattuthurai ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் திமுக தேர்தல் அலுவலக பூமிபூஜை