மதுரை: சிட்டிங் தொகுதி சாதகமாக இல்லாத சூழலில், தொகுதி மாற பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணி வைத்து போட்டியிட்டால் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் எவை என்பது குறித்து பாஜ தலைமை தரப்பில் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்துள்ளனர். இதில், பாஜவிற்கான தற்போதைய சிட்டிங் தொகுதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த முறை நெல்லை தொகுதியில் அவ்வளவு சாதகமான சூழல் இல்லை. இதனால் தொகுதியை மாற்றுவது நல்லது என ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதைத் தொடர்ந்து தனக்கு சாதகமான தொகுதி குறித்து நயினார் தரப்பு கள ஆய்வில் இறங்கியுள்ளது.
இவற்றில் தென்மாவட்டத்தில் பாஜவிற்கு சாதகமான தொகுதிகள் என மதுரை தெற்கு, சாத்தூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு கள ஆய்வை கட்சி தரப்பு ஒரு புறமும், நயினார் தரப்பு மற்றொரு புறமும் மேற்கொண்டது. இதில், ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே பல முறை பாஜ தரப்பில் போட்டியிட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கணிசமான வாக்குகளும் கிடைத்துள்ளன. பலமான கூட்டணி இருந்தால் வெற்றி கிடைக்கும் என்ற கணக்கில் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்துள்ளனர். ஆனால், ராமநாதபுரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை. பாஜவினரின் விருப்பத்திற்கு மாறான முடிவுகள் வந்துள்ளன.
ராமநாதபுரம் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளே வேட்பாளரை நிர்ணயம் செய்யும் அளவுக்கு உள்ளது. ஏற்கனவே அங்கு திமுக தரப்பிற்கு சாதமாக உள்ளதாகவும், அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து இருப்பதாலும் ராமநாதபுரம் தொகுதி நமக்கு சரிப்படாது என கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மதுரை தெற்கு தொகுதியில் பாஜ கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாலும், இந்த தொகுதி சரிப்பட்டு வருமா என பார்த்த போது, இந்த தொகுதியில் போட்டியிட மதுரையைச் சேர்ந்த சிலர் தீவிரம் காட்டிவருவதும், மாநிலத் தலைவர் நெல்லையில் இருந்து மதுரைக்கு வருவது அவ்வளவாக சரியாக இருக்காது என்றும் கூறியுள்ளனர்.
இதனால், மதுரை தெற்கு தொகுதியும் சரிப்பட்டு வராது என முடிவெடுத்த நயினார், கடைசியாக கையில் வைத்திருந்த தொகுதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி. இந்த தொகுதியில் கணிசமாக, தான் சார்ந்த சமூகத்தின் வாக்குகளுடன், அதிமுக மற்றும் அமமுகவினரின் வாக்குகளும் சேர்ந்தால் பாஜவிற்கு வெற்றி கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வேண்டப்பட்ட ஜோதிடர்கள் மற்றும் பாஜவில் உள்ள ஆன்மிக பிரிவைச் சேர்ந்தவர்களிடமும் ஆரூடம் கேட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். அவர்களும் எல்லாவற்றையும் கூட்டி, கழித்து பார்த்து ஓகே சொல்லியுள்ளனர். இதனால், அல்வா தொகுதியில் இருந்து காராசேவு தொகுதிக்கு மாறிவிடலாம் என முடிவு செய்துள்ளார் நயினார் நாகேந்திரன் என்கின்றனர் தாமரை தரப்பினர்.
