சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு பாக்யராஜ், அவரது துணைவியார் என்னுடைய இல்லத்திற்கு வந்து, இந்த அழைப்பிதழை தந்து, “என்னுடைய 50 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன், நிறைவு செய்திருக்கிறேன்.
கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அவசியம் நீங்கள் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள். “நிச்சயம் வருகிறேன். நான் வெளியூருக்குச் சென்றிருந்தாலும் எப்படியாவது நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அவரே பேசுகின்றபோது குறிப்பிட்டார், எழுத்து, அதுதான் முக்கியம், “அந்த எழுத்தை கலைஞர் எப்படி கையாண்டார் என்பதை அடிப்படையாக வைத்து என்னுடைய வாழ்க்கையில் நான் முன்னேறி இருக்கிறேன்” என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.
உண்மை தான் ஒரு எழுத்தாளராக, ஒரு திரைக்கதை வசனகர்த்தாவாக, ஒரு கதாசிரியராக, இயக்குனராக, நடிகராக, ஏன், இடையில் ஒரு அரசியல்வாதியாக இப்படி பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர். அவருடைய ஒரு படம் கூட நான் தவறவிட்டது கிடையாது. சென்னையில் படம் பார்த்தால், கூட்டம் அதிகமாக இருக்கும், வசதியாக பார்க்க முடியாது.
இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி அப்போது கைக்குழந்தையாக இருந்தார். அதனால், எங்கேயாவது அழைத்துக் கொண்டு சென்றால், அழுது கொண்டிருப்பான். அதற்காக குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய வெற்றி தியேட்டருக்கு, பல்லாவரத்தில் இருக்கக்கூடிய தியேட்டருக்குச் சென்று பாக்ஸில் உட்கார்ந்து பார்ப்பதுண்டு. ஏனென்றால், அழுதால் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காக.
அப்படியெல்லாம் சென்று அவருடைய படத்தை நாங்கள் பார்த்ததுண்டு. குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படமாக இருந்த காரணத்தால் தான், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டு பார்த்ததுண்டு. பாக்யராஜ் படத்தை ஒரே ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், அவருடைய திரைப்படங்களை எல்லாம் நாம் கவனித்துப் பார்த்தால், கதைக்காக பாக்யராஜா, பாக்யராஜுக்காக கதையா என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய மனதை தொடக்கூடிய அளவிற்கு, வெற்றிப் படங்களாக குவித்து, ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்தவர்.
50 ஆண்டு காலம் நிறைவு பெற்றிருக்கக்கூடிய இந்த நேரத்தில், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை, அவர் எப்படி கலைஞரை நினைத்து, என்னை அழைத்திருப்பதாகச் சொன்னாரோ, அதை உணர்ந்து நானும், என்னுடைய சார்பில் அல்ல தலைவர் கலைஞர் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
