×

முன்பதிவு இன்று தொடக்கம் பொங்கலுக்கு கூடுதலாக 5 சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகரிக்கும் பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே கூடுதலாக ஐந்து சிறப்பு ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, திருநெல்வேலி – தாம்பரம் இடையே 2 சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் ஜனவரி 13 மற்றும் 20ம் தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயில் காலை 3.45 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று மதியம் 2 மணிக்கு தாம்பரத்தை அடையும். மீண்டும் அதே நாளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலையில் திருநெல்வேலியை அடையும்.

இதேபோல திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே ஒரு சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் ஜனவரி 14ம் தேதி இயக்கப்படும். திருநெல்வேலி – தாம்பரம் இடையே மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜனவரி 12 மற்றும் 19ம் தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 12.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தை அடையும். இதில் ஏசி மற்றும் ஸ்லீப்பர் படுக்கை வசதிகள் உள்ளன.

பொள்ளாச்சி – சென்னை சென்ட்ரல் இடையே ஒரு முழு ஏசி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று (ஜனவரி 8) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக அடுத்த நாள் காலை சென்னையை அடையும். இந்த ரயிலில் 18 ஏசி 3 படுக்கை வண்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 12 மற்றும் 19ம் தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் இரவு 11.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு திருவள்ளூர், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக அடுத்த நாள் மதியம் தூத்துக்குடியை அடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Tags : Pongal ,Southern Railway ,Chennai ,Pongal festival ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...