×

பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை கிரீன் மேஜிக் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.6 விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றும் அதே விலையில் சந்தையில் கிடைக்கிறது. அதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. எனவே விலை உயர்வு பற்றிய செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே என்று தகவல் சரிபார்ப்பகம் எச்சரித்துள்ளது.

ஆவின் பால் வகைகள் அனைத்தும் வழக்கமான விலையில் கிடைக்கின்றன என்றும், தவறான செய்திகள் பரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் பொதுமக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : Aavin ,Chennai ,Green Magic ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...