சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரசிகர் என்ற பெயரில் உணர்ச்சியைத் தூண்டி, ஆர்வம் என்ற பெயரில் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை மதிக்காமல், ரூ.1000, ரூ.2000 அதற்கும் மேலான விலை வைத்து டிக்கெட்டுகளை விற்கும் வணிக மோசடி நடைபெறுகிறது.
ரசிகர் மன்றம் பெயரிலும், சிறப்பு காட்சி என்ற போர்வையிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி ஒரு ரூபாய் கூட பெற அனுமதிக்க கூடாது. மக்களின் உணர்வை பணமாக மாற்றும் இந்த திரைப்படக் கொள்ளைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திரையரங்குகளுக்கும், ரசிகர் மன்றங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
