- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
- வள்ளுவர் கோட்டம், சென்னை
- உதயநிதி…
சென்னை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: திறனை வளர்த்துக் கொள்வது என்றால், அது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.
அதற்கு நிலையான தன்மை வேண்டும். ஒழுக்கம் வேண்டும், முக்கியமாக கடின உழைப்பு நிச்சயமாக வேண்டும். இந்த மூன்றும் இல்லாதவர்களால் எந்தவொரு திறனையும் நிச்சயம் வளர்த்து கொள்ள முடியாது. சில பேருக்கு திடீர் என்று சில விஷயங்களில் ஆர்வம் வரும். அதில் அதிக நேரம் ஆர்வம் செலுத்துவார்கள். சில நாளைக்கு அந்த விஷயம் குறித்து படிப்பார்கள், கற்றுக் கொள்ள முயற்சி செய்வார்கள். அதன்பிறகு அதை பாதியிலேயே விட்டுட்டு, வேறு ஏதாவது விஷயத்துக்கு சென்றுவிடுவார்கள்.
அந்த மாதிரி இருந்தால், ஒவ்வொரு திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள முடியாது. நிலை தன்மை, ஒழுக்கம், கடின உழைப்பு இந்த மூன்றும் தொடர்ந்து இருந்தால் தான் நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பல உயரத்துக்கு நிச்சயம் சென்றடைய முடியும். இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டுதான் நம்முடைய கலைஞர். தமிழ்நாட்டில் பல திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய திறன் மேம்பாட்டுக் கழகம் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாணவர்களுடைய திறனை மேம்படுத்த முதலமைச்சர், ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஆரம்பித்தார். அந்த திட்டம், எந்த அளவுக்கு பயன் கொடுத்திருக்கிறது என்று, உங்களை எல்லாம் பார்க்கும் போது, இங்கு வந்திருக்கக்கூடிய வெற்றியாளர்களையெல்லாம் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்துகின்ற தமிழ்நாடு TN திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், இன்றைக்கு உலக திறன் போட்டி வரைக்கும் சென்று சாதிக்கின்றீர்கள்.
நான் முதல்வன் திட்டத்தில் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் தொடங்கி இப்போது வரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் கிட்டத்தட்ட 1,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது நம்முடைய அரசு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகில் பலநாடுகளில் இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக சென்று வருகிறீர்கள்.
அரசினுடைய ஸ்கவுட் (SCOUT) திட்டத்தின் மூலமாக, 10 மாணவர்கள் தென்கொரியாவில் பயிற்சி முடித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில், மேலும் 90 மாணவர்கள் ஜெர்மனி, ஜப்பான், போலாந்து, சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்ல இருக்கிறார்கள். நீங்கள் வேலை தேடுகின்ற நிலைமை மாறி, இன்றைக்கு நான்கு பேருக்கு வேலை கொடுக்கின்ற நிலைமைக்கு நீங்கள் உங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
