சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக இங்குள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. மேலும் மற்ற மாநிலங்களில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தரப்படும் உதவித் தொகையை விட இங்கு சிறப்பு மருத்துவர்களுக்கு மிக குறைவான ஊதியம் தரப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை அதிகரிக்கவில்லை. அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிறைவேற்றி, அவர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளார். அதுபோல அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம். குறிப்பாக அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டுகிறோம்.
