சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இலங்கையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக ேமலும் தீவிரம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிக்கு நெருங்கி வரும். தற்போது தீவிரம் அடைந்துள்ள தாழ்வுப்பகுதி, புதிய காற்று சுழற்சியுடன் இணைந்து மழை பெய்யத் தொடங்கும்.
இந்த மழை முதலில் இலங்கையில் கல்முனைப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி, பிறகு இன்று மதியம் இலங்கையின் கடலோரப் பகுதியில் பெய்யத் தொடங்கியது. தமிழகத்தில் வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதியில் இன்று மழை பெய்யத் தொடங்கும். அதன் ெ தாடர்ச்சியாக 9ம் தேதியிலும் கனமழை பெய்யும். ராமநாதபுரம் தொடங்கி திருவள்ளூர் வரையில் மதியத்தில் நல்ல மழை பெய்யும். இரவில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
அதுவரையில் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை வட கிழக்குப்பகுதியில் நிலை கொண்டு இருக்கும். அதன் தொடர்ச்சியாக 10ம் தேதியில் நேரடியாக டெல்டாவிற்கு நெருங்கி வரும். பசிபிக் பெருங்கடல் மற்றும் நிலநடுக்கோட்டின் பகுதியில் இருந்து குளிர் காற்றை இங்கு கொண்டு வந்து குவிக்கும் நிகழ்வு இந்த காற்றழுத்தம் காரணமாக ஏற்படும் என்பதால் காற்று டன் மழை பெய்யும். 8ம் தேதி கடல் காற்று கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வீசும். 9ம் காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும்.
10ம் தேதி அதிகாலையில் மிக கனமழை டெல்டாவில் பெய்யத் தொடங்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
10ம் தேதி மதியத்துக்கு பிறகு கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டையில் மதியத்துக்கு பிறகு மாலையில் மழை பெய்யும், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். மழை மேகம் உருவாகாத பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். அதிகாலையில் கடுமையான மூடுபனி இருந்தாலும், வெயில் வந்ததும் வெப்பம் ஏற்பட்டு பின்னர் மழை பெய்யும்.
இந்த மழை 12 தேதி வரை கனமழையாகவும், 13ம் தேதி தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். பொங்கல் பண்டிகையில் மழை பெய்வது குறையும். சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
