- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- 2026 சட்டமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திண்டுக்கல் ஊராட்சி
- திண்டுக்கல்
திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தல் தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால். தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? டெல்லியா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என மாவட்டந்தோறும் களஆய்வு செய்து வருவதுடன், அப்போது நடக்கும் அரசு விழாக்களில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அதன்படி நேற்று திண்டுக்கல்லுக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று ரூ.1,595 கோடி மதிப்பில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2 லட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், ரூ.23 கோடி மதிப்பிலான 61 புதிய பஸ்களின் போக்குவரத்து சேவையை துவங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக நான்கு சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக நான்கு சக்கர வாகனங்களை வழங்கினார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த துறை சார்ந்த காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர், விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகளாக நாட்டு மக்கள் எல்லோருமே பாராட்டும் அளவிற்கு, சாதனை திட்டங்களை செய்து கொண்டு இருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, 2026 புத்தாண்டு பிறந்ததும், இன்னும் அதிகமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம். அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி, சேலை, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என அறிவித்து இருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் நிலைமை என்ன? 2019ம் ஆண்டு பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டார். அதிமுக ஆட்சியின்போது ரூ.68 கோடி மதிப்பில் பெறப்பட்ட 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்து விட்டார்கள் என சிஏஜி அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக வெளியிடப்பட்டிருந்தது.
இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை எடுத்து பார்த்து கொள்ளலாம். மக்கள் நலனுக்காக நாம் செயல்படுத்தும் திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்னைகளை எல்லாம் உருவாக்கி குளிர் காயலாமா என்று நினைக்கிறார்கள். அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார்.
அவர் பேசியதெல்லாம் பார்த்த போது, ‘‘அவர் அமித்ஷா வா இல்லை, அவதூறு ஷா வா’’ என்று சந்தேகம் வருகிறது. அந்தளவிற்கு உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவு கட்டும் வகையில், நம்முடைய தமிழ்நாடு செயல்படுவதாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். இதற்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு அதாவது அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம். இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பாஜ மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதுமட்டுமல்ல. 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,701 கோடி மதிப்பிலான 7,655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசை பாராட்டுகிறார்கள்.
திமுக ஆட்சியில் இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. ஆன்மீக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்தி கொண்டு வருகிறோம்.
இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை, அது இனியும் நடக்காது.
நடக்கவும் விடமாட்டோம்தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்து விட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டு விட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கி விட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா, வேண்டாமா என்று மக்களை பார்த்து அமித்ஷா கேட்டிருக்கிறார். ஐயா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம்.
2026 தேர்தல் என்பது, தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை… எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், பாஜதான் தமிழ்நாட்டை ஆளும் என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித்ஷா நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.
மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள், மறுபடியும் நாங்கள்தான் வருவோம். நல்லாட்சியை தொடர்வோம். எதிலும் நம்பர் ஒன், அனைத்து துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0வில் இன்னும் பெரிய சாதனைகளை படைப்போம். இவ்வாறு பேசினார்.
* ப்ராக்சி ஆட்சி நடத்திய பாஜ
‘ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜவின் ‘ப்ராக்சி’ ஆட்சி நடந்தது. கடந்த 5 ஆண்டுகளாகதான் அதில் இருந்து தமிழ்நாடு மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 3 பொது தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக தந்ததும் உங்களுக்கு அது புரியவில்லையா, தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றி கொள்ளாதபோது, தமிழர்கள் மட்டும் தங்களுடைய முடிவை மட்டும் எப்படி மாற்றி கொள்வார்கள்.?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசியதெல்லாம் பார்த்த போது, ‘‘அவர் அமித்ஷா வா இல்லை, அவதூறு ஷா வா’’ என்று சந்தேகம் வருகிறது.
* நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். நீங்கள் ஆளுகின்ற பாஜ மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா?
* திமுக ஆட்சியில் இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது.
* அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், பாஜதான் தமிழ்நாட்டை ஆளும் என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அமித்ஷா நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.
