வாஷிங்டன்: அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதமான விவகாரத்தில் சார், தயவு செய்து உங்களை நான் பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அரசு 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதில் 25 சதவீதம் பரஸ்பர வரியாகவும், மீதமுள்ள 25 சதவீதம் அபராத வரியாகவும் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற குடியரசுக் கட்சி கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ‘எங்களுடைய புதிய வரி விதிப்பு நடவடிக்கையால் இந்திய பிரதமர் மோடிக்கு, என் மீது மகிழ்ச்சி இல்லை.
அவர் கோபத்தில் இருக்கிறார். ரஷ்யா – உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா எண்ணெய் வாங்குவதாக நாங்கள் கருதினோம். ஆனால் எங்களின் அழுத்தத்தால் இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கணிசமாக குறைத்துள்ளது. மோடி மிகச் சிறந்த மனிதர், அவருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. 68 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வழங்குவதில் 5 ஆண்டுகள் தாமதம் உள்ளதாக மோடி என்னிடம் கூறினார். அப்போது சார், தயவு செய்து உங்களை நான் பார்க்க முடியுமா? என்று மோடி என்னிடம் கேட்டார். அந்த சூழலை புரிந்து கொண்ட நான் அதை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.
