- டிரம்ப்
- கிரீன்லாந்து
- டென்மார்க்
- எங்களுக்கு
- மாநில செயலாளர்
- கோபன்ஹேகன்
- வெனிசுலா
- ஜனாதிபதி
- நிக்கோலா மடுரோ
- சீலியா...
கோபன்ஹேகன்: வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதையடுத்து அமெரிக்காவின் பாதுகாப்பை காரணம் காட்டி கடந்த 3ம் தேதி வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா அடிலா புளோரிஸ் இருவரையும் கைது செய்து, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், தற்போது அதே பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை கையகப்படுத்த டிரம்ப் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த டிரம்ப், “கிரீன்லாந்து முழுவதும் ரஷ்யா, சீனா கப்பல்கள் உள்ளன. அதனால் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது மிகவும் அவசியம்” என தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின்கீழ், தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய தீவு பகுதியான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மெட்டே பிரடெரிக்சன் கூறுகையில், “2ம் உலக போருக்கு பின் உருவாக்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பில் அரெிக்காவும், டென்மார்க்கும் இடம்பெற்றுள்ளன. நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தப்படி உறுப்பு நாடுகள் ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்த கூடாது. அவ்வாறு தாக்குதல் நடத்தினால் அனைத்து நேட்டோ கூட்டமைப்பு நாடுகளும் போராட்டத்தில் ஈடுபடும். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்த சிதறி விடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் அமெரிக்க வௌியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு எப்போது, எங்கு நடக்க உள்ளது என்ற தகவல்கள் வௌியாகவில்லை.
