- Thiruvaiyar
- பஞ்சரத்ன கீர்த்தனைகள்
- 179வது ஆராதனை விழா
- தியாகராஜ
- தியாகராஜ சுவாமிகள்
- முத்துசாமி தீட்சிதர்
- சியாமா சாஸ்திரி
திருவையாறு: திருவையாறில் தியாகராஜரின் 179வது ஆராதனை விழாவையொட்டி இன்று பஞ்சரத்தின கீர்த்தனை நடந்தது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒரே நேரத்தில் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிய தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரி ஆகிய மூவரும், சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படுகின்றனர். இதில் கர்நாடக இசை மரபை உருவாக்கியவர்களில் தலை சிறந்தவரும், `தியாக பிரம்மம்’ என்று போற்றப்படுபவருமான சத்குரு தியாகராஜ சுவாமிகள் திருவாரூரில் 1767ம் மே 4ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ராமபிரம்மம், தாய் சீதம்மா.
தியாகராஜ சுவாமி 1847ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் சித்தி அடைந்தார். திருவையாறு காவிரி கரையின் வடபகுதியில் அவருக்கு சமாதி அமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து தியாகராஜரின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. தியாகராஜ சுவாமி சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளன்று இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.
அதன்படி திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா கடந்த 3ம் தேதி மாலை டி.எஸ்.பாண்டியன், டி.எஸ்.சேதுராமன் குழுவினரின் மங்கல இசையுடன் துவங்கியது. தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து தினம்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசை கலைஞர்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை இசைத்து சத்குரு தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (7ம் தேதி) காலை நடந்தது.
முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து தியாகராஜர் சுவாமி சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு விழா பந்தலை அடைந்தது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி துவங்கியது. காலை 9 மணிக்கு விழா பந்தலில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சீர்காழி சிவசிதம்பரம், சுதா ரகுநாதன், வன்னி கிருஷ்ணகுமார், மகதி, நித்ய, ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். மாலையில் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. தஞ்சை எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
