×

சென்னையில் 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

 

சென்னை: சென்னையில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணியாளர்கள் அவற்றை சுத்தம் செய்தனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயானபூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த 5ம்தேதி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தீவிரத் தூய்மைப் பணியில் பூங்காக்களில் காணப்பட்ட தேவையற்ற செடிகள், தாவரக் கழிவுகள், குப்பை அகற்றப்பட்டு பூங்காக்கள் சுத்தம் செய்யப்பட்டது. இந்த பணியினை கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Municipality ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது