×

ஓசூரில் தொடர் கொள்ளை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

ஓசூர், ஜன.26: ஓசூர் மாநகராட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூரில் பணவர்த்தனை அதிகளவில் உள்ளது.  இங்கு செயல்படும் அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம்கள், நிதி நிறுவனங்களில் காவலாளிகள் பணியமர்த்தப்படவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன் ஓசூர்-பாகலூர் சாலையில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தில் வட மாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம், ₹96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி ஏடிஎம்களுக்கு செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நாள்தோறும் பலகோடி பண பரிவர்த்தனை நடக்கும் ஓசூர் மாநகராட்சியில் உள்ள ஏடிஎம்கள், நிதி நிறுவனங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநில எல்லை அருகில் உள்ளதால் ஓசூரில் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்திவிட்டு கொள்ளையர்கள் தப்பி செல்வது எளிதாக உள்ளது. எனவே, மாநகராட்சியை ஒட்டியுள்ள ஜூஜூவாடி, பூனப்பள்ளி, பாகலூர், கக்கனூர் ஆகிய சோதனைசாவடிகளில் வாகன தணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்களை வைத்து, போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : robbery ,Hosur ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்