×

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி ஜன.12ல் டெல்லியில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன்: உயர்நீதிமன்றத்தை நாட தவெக நிர்வாகிகள் முடிவு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஜன.12ல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாட தவெக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக தவெக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கடந்த நவம்பர் 24, 25 ஆகிய 2 நாட்கள் விசாரணை நடந்தது.

இவர்களை தொடர்ந்து கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேமானந்த், டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சம்மனையடுத்து, டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் டிச.29ம்தேதி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன் மற்றும் கரூர் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோரும் தனித்தனியாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். சிபிஐ எஸ்பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது, சென்னையில் இருந்து காலதாமதமாக புறப்பட்டது ஏன்? அதிக அளவிலான கூட்டம் சேர்ந்த பிறகும் விரைந்து செல்லாமல் இருந்தது ஏன்? காவல்துறை கூறிய பிறகும் வாகனத்தை நிறுத்தாமல் முன்னேறி சென்றது ஏன்? இதற்கெல்லாம் யார் காரணம்? என ஆதவ், நிர்மல்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி கை நீட்டி போட்டுக்கொடுத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடமும் சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் மட்டும் விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஜன.12ம் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். விஜய்யிடம் சிபிஐ விசாரிக்க உள்ளதால் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, சிபிஐ சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாட தவெக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 41 பேர் பலிக்கு நாங்கள் காரணமில்லை என கூறி வரும் தவெக நிர்வாகிகள், அதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அனுப்பிய சம்மனை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்வது ஏன்? எந்த தப்பும் செய்யவில்லை என்றால் சிபிஐ விசாரணையை விஜய் எதிர்கொள்வதற்கு தயங்குவது ஏன்? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags : Karur ,CBI ,Vijay ,Delhi ,Thaveka ,High Court ,
× RELATED எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவு...