புதுடெல்லி: அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தன்னையும் தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மீது பாஜக மூத்த நிர்வாகி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயதான அங்கிதா பண்டாரி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் இருவருக்கு கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, அங்கிதாவிடம் ‘சிறப்புச் சலுகைகளை’ எதிர்பார்த்த அந்த மர்ம நபர் (விஐபி) பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் தான் எனத் தொலைக்காட்சி நடிகை ஊர்மிளா சனாவர் என்பவர் வீடியோ வெளியிட்டது.
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ‘திட்டமிடப்பட்ட சதி மற்றும் போலியான செய்தி’ என மறுத்துள்ள துஷ்யந்த் குமார் கவுதம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று சிவில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், முன்னாள் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மற்றும் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் உட்பட மொத்தம் 12 பேர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார்.
‘இந்த வழக்கில் விஐபி தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என உத்தரகாண்ட் காவல்துறை ஏற்கனவே விளக்கமளித்துள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
