திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஜெயன் நேற்று பணியில் இருந்தார். கோயில் வடக்கு நடை அருகே ஜெயன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அவரை சக போலீசார் மீட்டு சன்னிதானம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் ஏட்டு ஜெயன் மரணமடைந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
